24 November 2015

மழை - வெள்ளத்தில் நாங்கள்!!

வார நாட்களில் மூன்று நாட்கள் எந்த வித அலுவலகத் தொல்லையின்றி கிடைப்பது என்பது நம்மில் பலருக்கு ஒரு வரமாகவே இருக்கும். சென்னையில் கொட்டித்தீர்த்த இந்த மழையால் அந்த மிக அரிய வரம் எங்களுக்கும் கிடைத்தது. இந்த மழையால் எங்களுக்கு கிடைத்த அனுபவம் மிக அருமை.

வீட்டிற்குள் தண்ணீர் வராமல், அடிபடைத் தேவைகளான பலசரக்கு சமானங்கள், காய்கறிகள், பால், குடிக்கத் தண்ணீர் அனைத்தும் இருந்தால் கட்டாயம் இந்த மழையை இரசிக்க முடியும்.

எங்கள் வீடு முதல் மாடி என்பதாலேயே வீட்டிற்குள் மழைத் தண்ணீரால் வரமுடியவில்லை.  மழை ஆரம்பித்தவுடனேயே மின்சாரத்தை நிறுத்தி விட்டார்கள். மின்சாரம் இல்லாமல் போனாலே வெளியுலகத் தொடர்பு கொஞ்சம் கொஞ்சம் காணமல் போய் விடுகிறது. மழை நின்றாலேயன்றி மின்சாரம் வரப் போவதில்லை. எப்படித்தான் பொழுது போகப் போகிறதோ என்று பயந்த எங்களுக்கு பொழுது எப்படிப் போனது என்றேத் தெரியவில்லை.


அடுக்குமாடி வீடு என்பதால் தண்ணீர் எந்த நேரத்திலும் தீரும் வாய்ப்பு அதிகம். முடிந்தவரை தண்ணீரை சேமித்துக் கொண்டோம். மழை அதிகமாகிக் கொண்டே போனதே தவிர குறையும் வழி இல்லை. இந்த மழை விடாது இரண்டு மூன்று நாட்கள் தொடரும், அணைகள், ஏரிகள் நிரம்பத் தொடங்கிவிட்டது. எந்த நேரத்திலும் அது உடைய வாய்ப்புண்டு. ஜாக்கிரதையாய் இருங்கள் என்று அன்போடும் அக்கறையோடும் உறவினர்களும், நண்பர்களும் தொலைப்பேசியில் பயமுறத்தத் தொடங்கி விட்டார்கள். இதற்கு எல்லாம் பயப்படும் ஜன்மமா நாங்கள். என்னத் தான் நடக்கும் என்று பார்த்துவிடாலாம் என்ற முடிவுடன் அந்த மழைக்கு இதமாக இருக்கும் என்று சுடச்சுட வெங்காய பஜ்ஜி செய்து வழக்கம் போல் அதைப் படம் பிடித்து வாட்ஸ்ஆப்பில் அனைவருக்கும் அனுப்பி சும்மா இருந்தவர்களையும் உசுப்போத்தி விட்டோம். ஏதோ எங்களால் முடிந்த ஒன்று.

ஞாயிறு மழை மிக அதிகம். அந்த மழையில் நணைந்த படி, அப்போழுதே முட்டிக்கு மேல் வரத் தொடங்கிய மழை நீரில் நீந்திச் சென்று வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் வாங்கி வந்த என் கணவரை இங்கு நான் பாராட்டாமல் இருக்க முடியாது.

இதிலும் கடமைத்தவராத வாட்ஸ்ஆப் குருப்பின் அட்மின் ஆன என் கணவர் வழியில் பார்த்த அனைத்தையும் படம் பிடித்து அனுப்பியது பலரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

இதில் குறிப்பிட்டே ஆக வேண்டிய விஷயம் கடையில் இருந்து வீட்டிற்கு வர ஆட்டோ ஏறிய என் கணவர் ஆட்டோ டிரைவரிடம் 'இந்த பாதையில் சென்றால் குறுக்கு வழி, ஆனால் தண்ணீர் மிகமிக அதிகம். நாம் சுற்றியே போய் விடுவோம் என்று சொல்ல, அதற்கு அந்த டிரைவர் இல்ல சார் நாம இந்த வழியிலேயே போய் பார்க்கலாம் என்று அந்த வழியிலேயே ஆட்டோவில் நீந்திய படியே ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தார். ' அந்த பயணத்தின் போது ஆட்டோவிற்குள் தண்ணீர் புகுவதை வீடியோ எடுக்கத் தவற வில்லை என் கணவர். நாங்கள் எல்லாம் எப்படி!! நாங்கள் தான் இப்படி என்றால் எங்களுக்கு கிடைத்த ஆட்டோ டிரைவரும் இப்படி அமைந்தது நல்ல அனுபவம். வீட்டிற்க்குள் நுழைந்து இதைச் சொன்னவுடன் நான் கேட்ட முதல் கேள்வி என்வாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள். அந்த ஆட்டோ டிரைவர் நம்பர் வாங்கினீர்களா என்பது தான். எப்படி?

அன்று மழை நிற்கவே இல்லை. வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் வர ஆரம்பித்தது. காலி இடங்கள் எல்லாம் ஏரி, குளங்களாகக் காட்சியளிக்கத் தொடங்கின. நாங்களும் அதை படம் பிடித்து தற்போதைய நிலவரம் என்று எல்லோருக்கும் அனுப்பி எங்களை பயமுறுத்தியவர்களை எல்லாம் பயமுறத்த ஆரம்பித்தோம்.

குடையுடன் எல்லோரும் மொட்டை மாடிச் சென்று ஏரியல் வியுவ் என்று எங்கள் மெத்த ஏரியாவும் எப்படி தண்ணீரில் மூழ்கிக் கொண்டு இருக்கிறது என்று பல கோணங்களில் படமாகவும், வீடியோவாகவும் அனுப்பி, அனுப்பி அன்றையப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தோம். இதில் தண்ணீர் தீர்ந்து விடுமோ என்று பெரிய டிரம், குடம் என்று  மழை நீரை சேமிக்க ஆரம்பித்தோம். தண்ணீர் தொட்டியைக் கூடத் திறந்து வைத்து மழை நீரை சேமிக்கத் தொடங்கினோம்.


காலையில் இருந்து அனுப்பிய படங்களையும், வீடியோக்களையும் பார்த்து வெளிநாடுகளில் இருந்து அழைப்பு வர ஆரம்பித்தது. எல்லோருக்கும் நாங்கள் நல்லப் படியாக இருக்கிறோம். ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லி சொல்லியே நடு இரவு வந்து விட்டது. இன்றைக்கு பொழுதை ஓட்டிவிட்டோம் உறங்களாம் என்று செல்லவும் நம் நண்பர்கள் அதுதாங்க கொசுக்கள் எங்களை நலம் விசாரிக்கவும் சரியாக இருந்தது. மின் விசிறி வேறு இல்லை. பிரச்சனை நம்பர் 1 என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதிர்ஷடம் நம்பர் 2 என்றார் என் கணவர். நம்பர் 1 ஆட்டோ. நம்பர் 2 கொசு பிரச்சனைக்கு பேஸ்புக்கில் தீர்வு. தண்ணீரில் சுடம் போட்டு வைத்தால் கொசு வராது. முயற்சித்தோம். கொசுவும் ஏமாந்து விட்டது. நிம்மதியான உறக்கம் எங்களுக்கு. நமக்கு கூட இப்படி ஒரு நல்ல அதிர்ஷ்டமா!!

மறுநாள் காலையிலும் மழை நின்றபாடில்லை. நான்கு சுவர்களோடு எப்பொழுதும் தண்ணீர் நிறைந்து ஒரு குளம் போல் தோற்றமளிக்கும் எங்கள் வீட்டிற்கு எதிரில் இருக்கும் இடத்தில் சுவர்கள் ஆங‍்காங்கே காணமல் போய் இருந்தன. ரொம்ப நாளாய் ஒரு ஓட்டைப் போட்டு தண்ணீரை எடுக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன். எல்லாம் இந்த கொசுக்களால் தான். இன்று கடவுளே மழையை அனுப்பி எங்கள் குறையைத் தீர்த்துவிட்டார் ( அதிர்ஷடம் நம்பர் 3 ) . நேற்றைய அதிர்ஷடம் இன்றும் தொடர்கிறதே என்று மகிழ்ந்து குழாயைத் திறந்தால் வெறும் காற்றுத் தான் வருது. தண்ணீர் வரவில்லை ( பிரச்சனை நம்பர் 2) .

சேமித்து வைத்த தண்ணீரை எடுத்துக் கொள்ளத் தொடங்கினோம். மழையோ நின்ற பாடில்லை. மின்சாரமும் வரும் அறிகுறியும் இல்லை. தண்ணீர் தான் அதிகமாகிக் கொண்டே போகிறதே. மழையும் நின்ற பாடில்லை. சின்னச் சின்ன குழந்தைகளை வைத்திருப்பவர்கள் எல்லாம் பயந்துப் போய் மூட்டை மூடிச்சைக் கட்டிக் கொண்டும் தங்கள் குழந்தைகளைத் தங்கள் தோலில் சுமந்துக் கொண்டும் செல்லத் தொடங்கினார்கள். எப்படியாவது மெயின் ரோட்டிற்க்குச் சொன்று விட்டால் ஏதோனும் வாகனம் பிடித்துச் சொன்று விடாலாம் என்ற எண்ணத்திலேயே இடுப்பு வரை வந்து விட்ட தண்ணீரில் நடக்கத் (மிதக்கத்) தொடங்கினார்கள்.

இப்படி வேடிக்கைப் பார்ப்பதிலும், சமையல் வேலையிலுமே காலைப் பொழுது போய் விட்டது. மதியம் நிறைய மக்கள் வெளியேறத் தொடங்கினார்கள். அவர்களிடம் விசாரித்தப் போதுதான் தெரிந்தது. எங்கள் ஏரியாவில் உள்ளவர்களை அழைத்துச் செல்ல படகும், லாரியும் வருகிறது என்று. முதலில் லாரி வந்து மக்களை ஏற்றிக் கொள்ள ஆரம்பித்தது. நாங்களும் வழக்கம் போல் படம் பிடிக்கத் தொடங்கினோம். வாட்ஸ் ஆப்பில் அனுப்ப வேண்டும் அல்லவா!!.


நேரம் ஆக ஆக குடித்தண்ணீரும், மேலே சேமித்து வைத்திருந்த தண்ணீரும் குறையத் தொடங்கியது.  ஒவ்வொருவருக்கும் பயமும் உண்டாகத் தொடங்கியது. தண்ணீரை நாம் எதிர்க் கொள்ளவது மிகக் கடினம். மழையும் நிற்கும் எண்ணத்தில் இல்லை. நாங்களும் அந்த இடத்தை விட்டு நகரும் எண்ணத்தில் இல்லை. மற்ற குடும்பங்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த நேரத்தில் நிறைய பேர் கிளம்பிப் போனால் இருக்கும் தண்ணீரை வைத்து இன்னும் ஒரு நாள் சமாளிக்கலாம் என்று எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.
எங்கள் குடியிருப்பில் ஒரு குடும்பம் வெளியேறத் தாயார் ஆகியது. லாரியோ,படகோ வரக் காத்திருக்க தொடங்கினர். நாங்கள் எங்கள் அப்பார்ட்மென்டுக்குள் படகு வருமா, அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று படம் பிடிக்க மெபைலுடன் காத்திருக்கத் தொடங்கினோம்.


நேரம் ஓட ஓட படகும் வரவில்லை. லாரியும் வரவில்லை. அதற்கு பதில் பால் பாக்கெட், பிஸ்கட், தண்ணீர் கேன் வேண்டுமா என்று கேட்டு வியாபாரிகள் அந்த மழையிலும். வெள்ளத்திலும் மிதந்தப் படி வந்தார்கள். சரியான வியாபாரம். அவர்கள் வாயில் அந்த நேரத்தில் வரும் விலை தான் அந்த பெருளின் விலை. ஒரு தண்ணீர் கேனை ரூபாய் 100 க்கு வாங்கினோம். என்ன செய்ய அந்த நேரத்தில் நமக்கு 100 ரூபாயை விட தண்ணீர் தானே முக்கியமாகத் தேன்றுகிறது. இந்த மழையிலும், இவ்வளவு தண்ணீரிலும் நமக்கு தேவையானதைக் கொண்டு வந்து கொடுக்கிறார்களே என்று தான் தோன்றுகிறது. எத்தனை இடத்தில் இது கூட கிடைக்காமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் வீட்டிற்கு வெளியே எங்குப் பார்த்தாலும் தண்ணீர், தண்ணீர். தண்ணீர் மட்டும் தான். ஆனால் வீட்டிற்கு உள்ளேயோ குடிப்பதற்க்குக் கூட தண்ணீர் இல்லை. என்னக் கொடுமை சார் இது!!

ஒரு வழியாக நாங்கள் எதிர்பார்த்த அந்த தருணமும் வந்தே விட்டது. ஆம்! படகு எங்கள் கார் பார்க்கிற்க்குள் வந்து விட்டது. படகு என்றால் இது சதாரண படகு இல்லை. இப்படி ஒன்றை நாங்கள் நினைத்துக் கூட பார்த்ததில்லை. அப்படி என்னத்தான் சிறப்பு என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.

ஒரு பெரிய பலகை. நம் வீட்டின் முன்னால் இருக்குமே கதவு அது போன்ற பலகை. அதன் இரு பக்கங்களிலும் கயிற்றால் கட்டப்பட்ட இரண்டு டிரம்கள். உண்மையான படகை எதிர்ப்பார்த்த எங்களுக்கு இந்தப்படகு கொஞ்சம் ஏமாற்றம் தந்தாலும் ஏதோ ஒரு படகு எங்கள் வீட்டிற்க்குள்ளும் வந்து விட்டது என்ற பெருமை எங்களுக்கு. படம் பிடித்து தள்ளிக் கொண்டிருந்தோம்.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், பெண்களும், குழந்தைகளும் மட்டுமே அதில் அமர வேண்டும் மற்றவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு வர வேண்டுமாம். ஓடுவது மழை நீர் என்றால் பரவாயில்லை. கழிவு நீரும் அல்லவா கலந்துக் கொண்டு ஓடுகிறது.எப்படி இருந்திருக்கும்.  இதிலும் ஒரு நாய் என்ன அழகாய் நீந்திச் சென்றது. தெரியுமா?

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், பெண்களும், குழந்தைகளும் மட்டுமே அதில் அமர வேண்டும் மற்றவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு வர வேண்டுமாம். எப்படி இருந்திருக்கும். வேறு வழியில்லாமல் மற்றவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு நீந்துவதைப் பரிதாபமாக மேலே பால்கனியில் இருந்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கத் தொடங்கினோம். மாலை நிலவரத்தை வாட்ஸ் ஆப்பில் போட வேண்டும் அல்லவா!!

இப்படியே மாலைப் பொழுது போய்க் கொண்டிருந்தது. இன்னும் நான்கு குடும்பங்கள் எங்களையும் சேர்த்து. சிறிது நேரத்தில் மேல் வீட்டுற்கு அவர் உறவினர் வந்து கைக்குழந்தையை வைத்துக் கொண்டு ஏன் இன்னமும் இங்கே இருக்கிறீர்கள் என்றுக் கூறிக் கொண்டே விரைந்து யாருக்கோ போன் போட்டு ஒரு லாரிக்கு ஏற்பாடும் செய்தார். இன்னொரு குடும்பமும் அவர்களுடன் சேர்ந்துக் கொள்ள தயாரானது.

இப்பொழுது எங்கள் நிலமை தலைக் கீழானது. பால், தண்ணீர் என்று அதிக விலைக்கொடுத்து வாங்கி வைத்தோம் அல்லவா, இப்பொழுது என்னடாவென்றால் கிளம்பத் தயாராய் இருந்தவர்கள் தங்களிடம் உள்ள பால், பழம், காய்கறி, தண்ணீர் அனைத்தையும் எங்களிடம் கொடுக்கத் தொடங்கினார்கள்.(அதிர்ஷடம் நம்பர் - 4). இவ்வளவு நேரம் என்ன செய்வது என்று திகைத்து நின்ற நாங்கள் இப்பொழுது சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு விடைக் கொடுத்து அனுப்பிவிட்டு நிலவரத்தை வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்து விட்டு உறங்கச் சென்று விட்டோம்.

மறுநாள் காலையில் மழை நின்றிருந்தது. தண்ணீர் கொஞ்சம் குறையத் தொடங்குவதுப் போல் இருந்தது. மின்சாரம் இல்லை. தண்ணீர் வற்றினால் ஒழிய மின்சாரம் வரப்போவதில்லை. மின்சாரம் இல்லாமல் இரண்டு நாட்கள் ஆன்ட்ராய்டு மொபைல் எப்படி என்று நீங்கள் யோசிப்பது கேட்கிறது. மழை என்று சென்னவுடனே நாங்கள் செய்த நல்ல காரியம். மொபைலை, இரண்டு பவர் பாங்க், லாப்டாப் என்று எல்லாவற்றையும் முழுவதும் சார்ஜ் செய்து வைத்தது தான் எங்கள் சிறப்பம்சம். சாப்பாடு, தண்ணீர் கூட இல்லாமல் நாங்கள் இருந்து விடுவோம். ஆனால் மொபைல் வாட்ஸ் ஆப் இல்லாமல் சத்தியமாக முடியாது. நாங்களெல்லாம் எப்பவுமே இப்படித் தான்!!!!!

மின்சாரத் துறையில் இருந்து சிலர் கீழே ஏதேனும் மின்சார வயர்கள் கீழே கிடக்கிறதா என்று பார்த்தப்படியே சென்று கொண்டிருந்தார்கள். அவர்களிடம் மின்சாரம் எப்ப சார் வரும் என்று கேட்க அவர்கள் இன்னும் ஒன் அவர்ல வந்துரும் சார் என்று காதில் தேன் பாய்ச்சிச் சென்ற போது காலை மணி 11.00

பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கொடுத்துவிட்டுச் சென்ற பழம், காய்கறி அனைத்தையும் மின்சாரம் இல்லாததால் பிரிஜ்க்குள் வைக்காமல் வெளியே மேஜை மீது வைத்திருந்தோம். இப்பொழுது பார்த்தால் நிறையக் கொசுக்கள். சிலப் பழங்கள் அதற்குள்ளாகவே அழுகத் தொடங்கியிருந்தன. இந்தக் கொசுக்களிடம் இருந்து இதை எப்படிக் காப்பது. மலேரியா, டொங்கு என்று பயமுறுத்தும் இந்த நாளில் நம்மை எப்படிக் காப்பது. (பிரச்சனை நம்பர் - 3)

பிடித்து வைத்திருந்த தண்ணீர் முழுவதும் தீர்ந்து விட்டது. மழையும் நின்று விட்டது. ஆந்திர நோக்கி நகர்ந்து விட்டது என்று ரமணன் அறிவித்தச் செய்தி தொலைப்பேசியின் வாயிலாக எங்களையும் எட்டிவிட்டது. கீழே தண்ணீர் கார் பார்க்கில் இருந்து சிறிது இறங்கியிருந்தது. ஆனாலும் எங்களால் வெளியே வர முடியாத அளவிற்கு தண்ணீர் இருந்தது. தண்ணீர் போனால் தான் மின்சாரம். மழை பெய்தால் தான் மேழே தண்ணீரைப் பிடிக்க முடியும். மழை பெய்யாவிட்டால் தான் கீழே தண்ணீர் போகும். எப்படி விளையாடுகிறது விதி பார்த்தீர்களா?

என்ன செய்வது நாமும் ஏங்கேனும் போய் விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தும். எனக்கு இத்தனை நாட்கள் இருந்து விட்டோம் இப்பொழுது பின் வாங்குவதா வேண்டாம் என்று முடிவேடுத்து மீண்டும் நிலவரத்தை எல்லோருக்கும் பதிவு செய்தோம். இருவரின் மெபைவலிலும் சார்ஜ் குறையத் தொடங்கியது.

மதியத்திற்கு மேல் தண்ணீர் கார் பார்க்கிங்கிள் இருந்து முக்கால்வாசிக் குறைந்திருந்தது. பக்கத்து அப்பார்ட்மென்டில் நன்றாகக் குறைந்து அவர்கள் சம்ப்களையும் தரைத் தளத்தையும் சுத்தம் செய்யத் தொடங்கினார்கள். என் கணவரும் நாமும் நம் சம்பை சுத்தம் செய்யது விடலாம் என்று முடிவெடுத்து நாங்களும் மேல் வீட்டுக்காரரும் சேர்ந்து அதே ஆட்களைக் கொண்டு சுத்தம் செய்தோம். லாரியைத் தவிர எந்த ஒரு வாகனம் வரமுடியாத அளவுத் தண்ணீர் இன்னும் இருந்தது. ஒரு லாரி வந்தாலே தண்ணீர் உள்ளே வந்து விடுகிறது. இந்த நிலையில் இது சரியா தவறா என்றேத் தெரியவில்லை. சுத்தம் செய்து விட்டோம். லாரி அந்த வழியே வரக் கூடாது என்று வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை எங்களுக்கு.

இப்பொழுது கொசுக்கள் போய் விஷ ஜந்துக்கள் வரத் தொடங்கிவிட்டது.

சுத்தம் செய்து முடித்து ஒரு தண்ணீர் லாரியை அழைத்து தண்ணீர் ஊற்றவும் தொடங்கியிருந்தது எங்கள் எதிர் வீட்டு அப்பார்ட்மென்ட். இதற்கு மேல் இப்படியே உட்கார முடியாது என்று தண்ணீரில் இறங்கி விட்டனர் என் கணவரும், மேல் வீட்டுக் காரரும். அந்த அப்பார்ட்மெண்டில் பேசி அந்த லாரித் தண்ணீரிலேயே சிறிது தண்ணீர் வாங்கி டிரம்களிலும், குடங்களிலும் நிரப்பிக் கொண்டோம். அதற்குள் அங்கங்கே மின்விளக்குகள் எரியத் தொடங்கின. அந்த எதிர் வீட்டு அப்பார்ட்மெண்ட் வரை. இதற்குள் எங்கள் மெபைலை அந்த அப்பார்ட்மெண்ட்டில் கொடுத்து சார்ஜ் போடும் அளவுக்கு போய் விட்டார் என் கணவர். இன்றைய காலக் கட்டத்தில் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் பக்கத்து வீட்டில் இருப்பவரிடமே பழகுவதில்லை நாம். பக்கத்து அப்பார்ட்மெண்ட் வரை என்றால் மிகப் பெரிய விஷயம் தானே! அதற்கு காரணம் இந்த மழை தானே. அதற்க்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

எங்கள் வீட்டிற்கு முன்னால் தான் தண்ணீர் அதிகம் என்பதால் எங்கள் லைனில் மட்டும் மின்சாரம் இ்ல்லை. தண்ணீர் போனால் தான் போல என்ற முடிவிற்கு நாங்கள் வந்த வேளையில் எங்கள் வயிற்றில் பால் வார்ப்பது போல் மின்சாரம் வர எங்கள் முகங்களிலும் ஒளி பரவியது. உடனே மெபைலை வாங்கி வந்து எங்கள் வீட்டிலேயே சார்ஜ் போட்டு விஷயத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்தி மகிழ்ந்தோம்.

எல்லாம் நாங்கள் சரி செய்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பின் மழையில் கிளம்பிய அனைவரும் ஒவ்வொருவராக தொலைப்பேசியில் அழைத்து தண்ணீர் போய் விட்டதா? கரண்ட் வந்து விட்டதா? மழை இல்லையா? சம்பில் தண்ணீர் வந்து விட்டதா என்று பலக் கேள்விக்குப் பின் வரத் தொடங்கினார்கள் என்று சொல்லத் தான் வேண்டுமா??

இந்த அனுபவங்களை அனுபவிக்க அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. வேறு என்னத்தச் சொல்ல!!

19 November 2015

சென்னையில் ஒரு வெள்ளக் காலம்!

சென்னையில் மழை பெய்தாலும் பெய்தது எல்லோரும் வாட்ஸ் ஆப்பிலும், பேஸ் புக்கிலும் வெளுத்து வாங்குகிறார்கள். 

மழை ஒரு சந்தோஷம். அதுவே தொடர்மழையாகவோ அல்லது தொடர் கனமழையாகவோ இருந்தால் அது சந்தோஷமாக இருக்குமா நமக்கு. நிச்சயம் இருப்பது இல்லை. காரணம் பொருட் சேதமும் சில நேரங்களில் ஏற்படும் உயிர் சேதமும் நம்மை மிகவும் அச்சப்பட வைக்கிறது.

இந்த வெள்ளத்திற்கு மிக முக்கிய காரணமாகச் சொல்லப் படுவதில் ஒன்று ஏரி, குளங்கள் இருந்த இடத்தை எல்லாம் அடுக்குமாடி வீடுகளாக மாற்றியது. இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியவர்கள் நிலத்தை விற்றவர்களும் அதை வாங்கியவர்களும் மட்டுமல்லாமல் இந்த மழைக்கு காரணமாக இருக்கும் வருண பகவானும் தான். (அப்படி போடு அருவாளை!) 

வருண பகவான் வருடா வருடம் தவறாமல் மழையைப் பெய்ய வைத்திருந்தால் நமக்கும் எது ஏரி, எது குளம் என்று தெரிந்திருக்கும். நாமும் அதை ஏரி, குளங்களாகவே விட்டிருக்க வாய்ப்பும் உண்டு.

மக்கள் தொகையையும், வாகனப் பெருக்கத்தையும் அதிகம் ஆக்கி சுற்றுப்புறச்சூழலைக் மாசு படுத்தி விட்டு வருணபகவானைக் குறைச் சொல்லவதும் தவறு தான். என்னடா இவள் இப்படியும் பேசுகிறாள் அப்படியும் பேசுகிறாள் என்று எண்ணாதீர்கள் இதுவும் உண்மைதானே!!

எல்லாவற்றிற்க்கும் கடன்களை வாரி வாரி வழங்கும் வங்கிகளும் இதற்கு ஒரு வகையில் காரணம் என்றும் சொல்லலாம்.

நம் கட்டிட வல்லுனர்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை. இந்த இடத்தில் மழை பெய்தால் வெள்ளம் கட்டாயம் வரும் என்று தெரிந்தே இந்த அடுக்கு மாடி வீடுகளை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. கீழ்தளம் முழுவதும் வாகனங்களுக்காகவும், முதல் தளம் முதலே வீடுகளையும் அமைத்திருக்கிறார்கள். வெள்ளம் வந்தால் கீழ்தளம் மட்டுமே மூழ்கும் வகையில். என்ன ஒரு ஞானம்!

அடுத்தக் காரணமாக சொல்லப் படுவது ஏரி, குளங்களைத் தூர் வாராமல் விட்டது. இதில் இயற்கையின் பங்கோடு, நம் பங்கும் மிகமிக அதிகமாக இருக்குறது. இப்பொழுது அவசர அவசரமாகத் தூர்வாரியிருக்கும் காட்சிகளைத் தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்திருந்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும் அங்கே நீர் தாவரங்களோடு, நாம் தூக்கி ஏறிந்த பிளாஸ்டிக் பொருட்களும், பிளாஸ்டிக் காகிதங்களுமே அதிகம் என்று. அது நீர் வரும் தடங்களில் சென்று அடைத்துக் கொள்வதாலேயே பெரும் பாதிப்புக்குள்ளாகிறோம். அரசாங்கத்தை திட்டிக்கொண்டு இருக்காமல் நாம் செய்யும் இது போன்ற தவறுகளையும் திருத்திக் கொண்டால் இது போன்று எதிர் காலங்களில் வரும் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்கலாம் தானே. 

இந்த மழையால் எங்களுக்கு உண்டான அனுபவங்களை அடுத்த பதிவில் பதிகிறேன்.