01 January 2017

365 நாட்கள் பி3ல்லி மில்லியுடன் நாங்கள்!!


என்னது??? 2016 முடிந்து 2017 தொடங்கி விட்டதா?? அப்படி என்றால் இந்த  சுண்டான்கள் பி3ல்லியும் (Billy) மில்லியும் (Milly) வந்து ஒரு வருடம் ஆகி விட்டதா?? என் கணவரின் கைகளைக் கிள்ளிப் பார்க்கிறேன். ‘ஆஆஆ…’ என்று கத்தவும் ஒரு வருடம் முடிந்தது உறுதியே ஆகிவிட்டது. நாட்கள் போனதே தெரியவில்லை. ஒரு நாள், இல்லை இல்லை ஒரு நொடிப் போல் இருக்கிறது, அதற்குள் ஓர் ஆண்டா?? நம்பவே முடியவில்லை!!

பி3ல்லி மில்லியின் ஓர் ஆண்டு லீலைகளைப் பதியச் சொல்கிறார் என் கணவர். ஒர் ஆண்டு முடிந்ததையே நம்ப முடியாத எனக்கு எங்கு தொடங்குவது, எதை எழுதுவது, எதை விடுவது என்றே தெரியவில்லை.

முறையே 31/2 , 3 மாதத்தில் எங்களிடம் வந்தவர்கள் பி3ல்லியும் மில்லியும். சின்னக் குழந்தைகள். இவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சுதந்திரம் பறிப்போகக் கூடாது என்று பல எண்ணங்கள் எங்களுக்குள்.

வீட்டிற்க்கு வந்த புதுதில் கொஞ்சம் பயந்தார்கள். பின் எங்களுடன் நன்றாகவே ஒட்டிக் கொண்டார்கள். இப்பொழுது எல்லாம் எங்களைத் தவிர யாரிடமும் போக மறுக்கிறார்கள் எங்கள் செல்லக் குட்டிகள். முதலில் அவர்கள் தேவைகளைப் புரிந்துக் கொள்வதில் எங்களுக்கு மிகுந்த சிரமம் இருந்தது. ஒன்று, இரண்டு வயதுக் குழந்தைகள் தங்களுக்கு தேவையானதை எப்படித் தங்கள் பெற்றேருக்கு புரிய வைப்பார்களோ அப்படி தான் இவர்களும் எங்களுக்கு புரிய வைக்க ஆரம்பித்தார்கள். இன்று இவர்களுடைய பல செயல்களும் எங்களுக்கு புரிய ஆரம்பித்து விட்டது.(!!)

பெட்டியைத் தட்டிக் கொண்டும், கணக்கு எழுதிக் கொண்டும் இருந்த எங்களை பிரசவம் கூட பார்க்க வைத்து விட்டார்கள். பிரசவக் காலத்தில் அவர்கள் இருவரின் கடமை உணர்ச்சியையும், அவர்களின் புரிதல்களையும், அவர்களின் திட்டமிடலையும் பார்த்து நாங்கள் வியந்தே போனோம். குழந்தைகள் என்று நினைத்து, பிரசவத்தை எப்படி சமாளிப்பார்களோ?, முட்டையை சரியாக அடைக்காப்பார்களா? குட்டிக்கு உணவை எப்படி ஊட்டுவார்கள் என்று பயந்த எங்களுக்கு, ஏதோ மிகுந்த அனுபவம் உள்ளவர்களைப் போல அவர்கள் அத்தனையும் செய்த அழகு இருக்கிறதே எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை. காலை பொழுதொல்லாம் பி3ல்லியும், இரவு முழுவதும் மில்லியும் அடைக்காத்தார்கள்.  இவர்கள் ஒரே நாளில் எல்லா முட்டையையும் போடவில்லை. 48மணிக்கு ஒரு முறை ஒரு முட்டைப் போட்டாள் மில்லி. முட்டைப் போடும் முன் மில்லி அங்கும் இங்கும் வேகவேகமாக நடப்பாள். முட்டைப் போட தன்னை தயார் செய்து கொள்கிறாள். இந்த நாட்களில் அவர்கள் அருகில் கூட எங்களை அனுமதிக்கவில்லை இருவரும். உணவு, தண்ணீர் வைப்பதற்கு தவிர வேறு எதற்க்கும் எங்களுக்கு அனுமதி இல்லை.  இவ்வளவு ஞானம் எப்படி வந்தது. இயற்கையின் அதிசயம் தான் என்ன!!!

ஒருபுறம் சந்தேஷத்தையும் இன்னொருபுறம் சோகத்தையும் முதல் பிரசவத்தில் பார்க்க வைத்து விட்டரார்கள். போட்ட ஐந்து முட்டைகளில் இரண்டில் குட்டிகள். 21 நாட்கள் அடைகாத்து வந்த குட்டிகள். இவர்களுக்கு உணவு ஊட்டுவதும், மீதி இருந்த முட்டையை அடைக்காப்பதுமாக மிகவும் பிஸியாகி விட்டார்கள் இருவரும். குட்டி பிறந்து 21 நாட்கள் முடிந்த நிலையில் நாங்கள் ஆசையாக அவர்களை தூக்கிக் கொஞ்சினோம். எப்படி அது நிகழந்தது என்றே தெரியவில்லை மறுநாள் இரண்டு குட்டிகளில் ஒன்று இயற்க்கை ஏய்திருந்தது. தாங்கவே முடியாத சோகம் எங்களுக்கு. தவறு எங்களுடையதா என்றும் தெரியவில்லை. அவர்கள் இருவருக்கும் இது எவ்வளவு தூரம் பாதித்தது என்று அப்பொழுது எங்களுக்கு தெரியவில்லை. அதன் பாதிப்பாக இரண்டாம் பிரசவம் அடுத்த மூன்று மாதங்களில் .

ஆம் இன்று இவர்களுக்கு ஆண் (Belly) ஒன்று பெண் (Ellie) ஒன்று என இருக்குழந்தைகள். ஒரு வருடத்திற்க்குள் மாமனார் மாமியார் கூட ஆகி விட்டார்கள். ஆமாம் அவர்கள் மூத்த மகனு(Belly)க்கு பெண் (Jelly) பார்த்து திருமணமும் செய்தாகிவிட்டது.

பி3ல்லியின் திறமைக்கு ஓர் எடுத்துக்க்காட்டு. யுடியூப்(Youtube) ல் நிறைய பாடல்களைக் கேட்டு ஹாப்பி பர்த்டே, கார் ரிவர்ஸ் மட்டும் அல்லாமல் அதில் அவனுக்குப் பிடித்த வரிகளையும், சத்தத்தையும் வைத்து தனக்கென்று ஒரு பாடல், மெட்டு போட்டு அசத்துகிறான் பி3ல்லி.

வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் நாம் தான் முக்கியமான, விலைவுயர்ந்த பொருட்களை பத்திரமாக வைக்க வேண்டும் என்பார்கள். அஜாக்கிரதையாக இருந்தால் என்னவாகும் என இருவரும் எங்களுக்குப் புரிய வைத்தார்கள்.

என் கணவர் ஆபிஸ் மடிக்கணிணியில் வேலைப் பார்த்த்து அதை மூடாமல் சிறிது நேரம் வெளியே சென்று இருந்தோம். நாங்கள் எப்பொழுது கணிணியைத் திறந்தாலும் எங்களையேப் பார்த்துக் கொண்டு இருப்பான் பி3ல்லி. கீயை அழுத்த நாங்கள் சிரமப்படுவதாக நினைத்தானோ என்னவோ, நாங்கள் திரும்பி வருவதற்க்குள் 25 முதல் 30 கீகளை கடித்து எடுத்திருந்தான். எங்களைப் பார்த்ததும், வாயில் ஒரு கீயுடன் கொண்டை அப்படியே நிமிர்ந்து நிற்க பி3ல்லி திருதிரு என முழித்தது இன்றும் எங்களால் மறக்க முடியாது.

கீ மட்டும் அல்லாமல் மொபைல் சார்ஜ்ர், துணிக்காயப் போடும் கொடி, புத்தகங்கள், துணியில் இருக்கும் குச்சல் என்று சொல்லிமாளாது.

என் மொபைல் அலறினால் போதும், பி3ல்லியும், மில்லியும் நான் வரும் வரை அல்லது நான் ‘வந்துட்டேன்’னு சொல்லும் வரை விசில் அடித்துக் கொண்டே இருப்பார்கள். அதே போல் நான் அலுவலகம் விட்டு வரும் போது எங்கு இருந்தாலும் வாசலுக்கருகில் வந்து எனக்காக காத்துக் கொண்டு இருப்பார்கள். நான் கை, கால் கழுவும் வரை தான் அமைதியாய் இருப்பார்கள். அதற்க்குப்பின் இறக்கையை விரித்து, கழுத்தை மேலே தூக்கி, என்னை தூக்கச் சொல்வார்கள். அப்பொழுதும் தூக்காவிட்டால் பின்னாலேயே வந்து அடம்பிடிப்பார்கள்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்தால், முதலில் நலம் விசாரிப்பது இவர்களையே!!! சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டிற்க்கு மட்டும் அல்லாமல் இரயிலில் ஏறி மதுரை வரைக்கூட சென்று வந்து விட்டார்கள் இந்த சுண்டான்கள்!! இவர்கள் இரயில் பயணம் ஒரு தனிக் கதை. அதை மற்றுமொரு நாளில் தனி பதிவாகவே பதிகிறேன்.

இவர்களின் லீலைகளை எழுத ஆரம்பித்தால் எழுதிக் கொண்டே இருப்பேன். அதனால் இந்த பதிவை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இனி வரும் நாட்களில் இவர்கள் செய்யும் லீலைகளை முடிந்த மட்டும் பகிர்கிறேன்…..


06 July 2016

பி3ல்லி மில்லி உலகத்தில் நாங்கள் - 1


பி3ல்லி  பாடக் கற்றுக் கொண்டது எப்படித் தெரியுமா?

வாட்ஸ் ஆப் குரூப்பில் சின்ன குழந்தைகளுக்கு பிறந்த நாள் வந்தால் வாழ்த்துக் கூற இணையத்தில் இருந்து காக்டெயில்கள் ஹாப்பி பேர்த்டே பாடுவதை டவுன்லோடு செய்து அனுப்புவதுண்டு. அதைப் பார்த்து நம் பி3ல்லியின் குரலில் நாங்கள் எப்பொழுது கேட்கப் போகிறோம் என்று சிலர் கேட்க ஆரம்பிக்கவும் நாம் ஏன் இந்த விடியோவை வைத்து பி3ல்லிக்கு பாடக் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று தோன்றியது. ஆனால் அது சாத்தியமா? என்று அப்போது தெரியவில்லை.

தினமும் மாலை வீடு வந்தவுடன் அவர்களைக் கொஞ்சி விட்டு பின் விடியோவை ஆன் செய்வேன். முதலில் இருவரும் பாடலைக் கேட்கவில்லை. தங்களைப் போல் ஒன்றைப் பார்த்தவுடன் இருவரும் சந்தோஷத்தில் பறப்பதும், சத்தமாக விசில் அடிப்பதுமாக இருந்தார்கள். ஒரு வாரம் இப்படியே போனது. நானும் விடாமல் தினமும் அதை முதலில் 10 நிமிடம், பின் 15 நிமிடம் என கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கினேன். முதல் வாரம் கத்திக் கொண்டே இருந்த பி3ல்லி இப்பொழுது பாட்டைக் கவனிக்கத் தொடங்குவதாகப் பட்டது. நான் 15 நிமிடம் தொடர்ந்து பாட வைத்து மொபைலை எடுக்கப் போனால் பி3ல்லிக்கு கோபம் வரும். மொபைலை பிடுங்க வருவான். மொபைலை எடுக்கப் போய் கடி வாங்கிய அனுபவம் என் கணவருக்கு உண்டு. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அந்த விடியோவை  மில்லி பார்ப்பது பி3ல்லிக்குப் பிடிக்காது. உடனே அவளைத் துரத்திவிட்டுத் தான் மறுவேளைப் பார்ப்பான். மில்லிக்கு விடியோவைப் பார்க்க அவ்வளவு ஆசை. என்னிடம் ஓடி வந்து என் மேல் ஏறி பார்க்க ஆரம்பிப்பாள். பி3ல்லிக்கு கோபம் வரும் என்னை முறைத்துக் கொண்டே பாட்டைக் கேட்டுக் கொண்டிருப்பான். இப்படியே மூன்று வாரம் போனது பி3ல்லி பாட்டைக் கேட்டானே ஒழிய அதைப் பாடவில்லை. எனக்கும் பொறுமை போய்விடும் போல் இருந்தது. நான் விடியோவை ஆன் செய்தாலே மில்லி கொட்டாவி விட ஆரம்பித்தாள். பின் தலையைச் சொறிந்து கொள்ள ஆரம்பிப்பாள். ஒரே விடியோ தொடர்ந்து நான்கு வாரமாக போய்க் கொண்டிருந்தது. எனக்கே ஒரு வித அலுப்பு வரத் தொடங்கி போடாமல் விட்டால் பி3ல்லி விட வில்லை. மொபைல் மேல் ஏறி நின்று போடச் சொல்லி என்னைப் பார்ப்பான். போட்டால் அவ்வளவு கவனமாகக் கேட்பான். ஆனால் ஒரு தடவைக் கூட பாடவில்லை.

                                         
ஒரு நாள் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து களைத்துப் படுத்து விட்டேன். எங்கிருந்தோ ஹாப்பி பேர்த்டே பாடுவது போல் கேட்கிறது. கனவு போலும். அடிக்கடி கேட்பதன் பக்கவிளைவு என்று நினைத்தேன். ஆனால் வர வர மிக மிக அருகில் கேட்பது போல் இருக்கவே கண்ணைத் திறந்தால் நம் பி3ல்லி!!

என்னால் நம்பவே முடியவில்லை. அவ்வளவு அழகாக என்னைப் பார்த்து பாடிக் கொண்டே இருந்தான். நான் சூப்பர் ர என் செல்லம். என் லட்டு என்று அவனைக் கொஞ்ச ஆரம்பித்து விட்டேன்.

ஹாப்பி பேர்த்டே டு யு வை எப்படி நேரம் பார்த்து பாடுவது என்பது இருவருக்கும் தெரியும். அதை அடுத்து வரும் பதிவுகளில் சொல்கிறேன்.

பி3ல்லி மில்லி உலகத்தில் நாங்கள்!! இன்னும் வரும்!!

04 July 2016

வசந்தம் வந்ததே!!

இந்த வருடம் பிறந்த முதல் தேதியிலிருந்து, எங்கள் வீட்டிற்க்கு வந்த சந்தோஷங்கள். எங்கள் செல்லங்கள். இவர்கள் காக்டெயில் வகையைச் சேர்ந்த பறவைகள். ஆண் (3 மாதம்) ஒன்று. பெண் (3 1/2 மாதம்) ஒன்று. ஆமாம் மகனும் (மரு)மகளும்!.  இவர்கள் மனிதர்களிடம் மிகவும் நெருங்கிப் பழகக் கூடியவர்கள்.  கடந்த ஆறு மாதங்களில் இவர்கள் செய்த லீலைகளைத் தான் இந்த பதிவிலிருந்து பதியப் போகிறேன்.

வீட்டிற்க்கு வந்த முதல் நாள் கூண்டை விட்டே வர மறுத்தார்கள். நாங்களும் இவர்களுக்கு புதிது. இவர்களும் எங்களுக்கு புதிது. இருவருக்குமே பயம். கையில் தூக்கிக் கொள்ள கொள்ளை ஆசை எங்களுக்கு. ஆனால் அனுபவமோ எங்கள் இருவருக்கும் பூஜ்யம்.  நாங்கள் இவர்களை வீட்டிற்க்கு அழைத்து வரும் முன்பே எங்கள் உறவினர்கள் வீட்டிற்க்கு வந்து எங்கள் புதிய குடும்ப அங்கத்தினர்களை வரவேற்றார்கள்!!

வந்த முதல் வாரம், எளிதாக எங்களால் தூக்க முடிந்தது மகனை மட்டுமே. மகளைத் தொடக் கூட முடியவில்லை. கடிக்க வருவது போல் எங்களை பயமுறுத்துவதும், பயந்து பின்னால் செல்வதுமாகவே இருந்தாள். நாங்களும் அவளை பயமுறத்த வேண்டாம் என்று விட்டு விட்டோம். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இவள் பயப்படுவதோடு நிற்காமல் இவனை வரச் சொல்லி சைகை வேறு.

ஒரு வாரம் முழுவதும், இருவரும் மிகவும் அமைதியாகவும், கூண்டை விட்டு அவ்வளவு எளிதில் வெளியே வராமலும் இருந்தார்கள்.

மகன் ஒரு வித வித்தியாசமான ஒலியை எழுப்புவான். நமக்கு மூச்சுத் திணறலின் போது வருமே அது போல் இருக்கும். அது போன்ற ஒலி பெண்ணிடம் இருந்து வராது. அவள் கூண்டில் உள்ள கம்பிகளைப் பிடித்து ஏறிவிடுவாள். ஆனால் இவனோ அப்படி செய்ய மாட்டான்.  எங்களுக்கு அதன் அர்த்தம் அப்பொழுது புரியவில்லை. அவனுக்கு உடம்புக்கு ஏதோ பிரச்சனையோ என்று நினைத்து அவனை அழைத்துக் கொண்டு அந்த கடைக்காரரிடம் சென்றோம். அங்கு ஒரு தடவைக் கூட அந்த சத்தம் போடவேயில்லை. கடைக்காரரோ உங்களுக்கு இவனைப் பிடிக்கவில்லை என்றால் வேறு ஒன்றை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம், எனக்குத் தெரிந்து அவனுக்கு உடம்புக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார்.

நாம் பெற்ற பிள்ளைக்கு ஒன்று என்றால் குழந்தையை குணமாக்க நினைப்போமே தவிர அக் குழந்தையை மாற்றவா முயலுவோம். மாற்ற வேண்டாம். ஏதாவது பிரச்சனை இருந்தால் எப்படி சரி செய்வது என்று தெரிந்து கொள்ளத் தான் வந்தோம் என்று சொல்லி விட்டு அவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டோம்.

இவர்களுக்கு பெயர் வைத்ததே ஒரு சுவையான நிகழ்வு தான். எத்தனைப் பெயர்களைத் தேடினோம் இணையத்தில். Rio படத்தில் வரும் பெயர்களை எல்லாம் ஆராய்ந்தோம். ஆனால் எதுவுமே இவர்களுக்கு பொருந்துவதாகத் தோன்றவில்லை எங்களுக்கு. இறுதியில் வாட்ஸ்ஆப் குரூப்பில் இவர்களுக்கு பொருத்தமான பொயரைச் சொல்லச் சொன்னோம். நிறைய பெயர்கள். சின்னப் பெண் சொன்ன பி3ல்லி, மில்லி பெயர் இருவருக்கும் பிடிக்கவே நல்ல நாளாகப் பார்த்து இருவரின் காதிலும் அவர்கள் பெயரை மூன்று முறை ஓதி விட்டோம். ஆம்!! நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் வைத்த பெயராயிற்றே!! பையன் பி3ல்லி!! பெண் மில்லி!!

இரண்டாவது வாரத்தில் மில்லியை கூண்டில் இருந்து வெளியே கொண்டுவர கடைக்காரர் சொன்ன யோசனையின் படி பி3ல்லியை கூட்டிக் கொண்டு மில்லியின் பார்வையில் படும் படி அவனைத் தூக்கி கொஞ்சி, தோலில் வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார் என் கணவர். சில விநாடிகள் தான் மில்லி வெளியே வந்து கத்த ஆரம்பித்தாள். என் கணவரும் அவள் அருகில் சென்றவுடன் அவளும் கையில் ஏறி தோலுக்கு வந்து விட்டாள். கடிக்கவோ, கத்தவோ இல்லை. நான் பி3ல்லியைத் தூக்கவேன். ஆனால் மில்லியை தூக்க பயப்படுவேன். இரண்டாவது வாரம் முடியும் பொழுது எல்லாமே தலைக் கீழாக மாறி விட்டது. இதற்கு நடுவில் பி3ல்லிக் காய்ச்சல் வந்து அவனுக்கு மருந்தை உணவோடு கொடுத்து அப்பப்பா என்னவெல்லாம் இருக்கிறது.

காலையில் எழுந்தவுடன் ஆண் பறவை பாட ஆரம்பிக்கும். பெண் பறவை பாடாது என்று இணையத்தில் படித்திருக்கிறேன். கடந்த இரு வாரமும் பயத்தில் அவர்கள் போடும் விசில் சத்ததைத் தவிர பி3ல்லி எந்த பாட்டும் பாடியதில்லை. நான் கூட பி3ல்லியைத் தூக்கி வைத்துக் கொண்டு, வெளியே கேட்கும் பறவைகளின் குரலைக் கேட்டு நீ எப்படா இப்படி பாடுவே என்று கேட்பதுண்டு. என் கணவரோ, ஏன் இப்படி அவனைப் படுத்துறே என்பார்!!

இரண்டு வாரங்களுக்குப் பின் பி3ல்லியிடம் அந்த சத்தம் குறைந்திருந்தது. பின்பு தான் தெரிந்தது அது பயந்தால் வரும் சத்தம் என்று. ஆனால் அது தவிர வேறு எந்த சத்தமும் இல்லை. மிகவும் சாதுவான பையன் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டோம் நாங்கள். ஆனால் இது வரை வாயேத் திறக்காமல் இருந்த மில்லி வாயைத் திறந்து பாட ஆரம்பித்தாள். திறந்த வாயை மூடவேயில்லை. காலை எழுந்ததும் எஸ்.பி.பி. போல் மூச்சுவிடாமல் பாடுவாள். மிகவும் இனிமையாக இருக்கும். காலையில் மட்டும் சாதகம் செய்ய ஆரம்பித்த மில்லி பின்பு அவளுக்குத் தோன்றும் போது எல்லாம் பாட ஆரம்பித்தாள். சன் மியூஸிக்கில் வரும் பிரேக் பிரி சங் போல. அவளை அடக்க  பி3ல்லி ஒருவனால் தான் முடியும். ஒரே ஒரு சத்தம் போதும் அவளை அடக்க!! சரியான வாயாடி மில்லி!!  ஆண் சிங்கம் பி3ல்லி!!

இதற்கு பிறகு அவர்கள் செய்த லீலைகள் ஏராளம் ஏராளம்!!

முன்பெல்லாம் அலுவலகம் விட்டு வீட்டிற்க்கு வரவே கடுப்பாய் இருக்கும். வீட்டில் ஒரு வித தனிமையும், வெறுமையும் இருப்பது போல் தோன்றும். ஆனால் இப்பொழுது அலுவலகம் எப்பொழுது முடியும் என்று காத்திருக்க ஆரம்பித்து விட்டோம். பி3ல்லி, மில்லி உடன் விளையாட.

கூண்டை விட்டு வெளியே வரத் தயங்கியவர்கள், இப்பொழுது என்னடாவென்றால் ஹாலுக்கும், ரூமுக்கு, பால்கனிக்கு என்று உலவ ஆரம்பித்து விட்டார்கள். காலையில் எழு மணிவரைத் தான் எனக்கு நேரம். அதற்குப்பின்  கூண்டைத் திறந்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் கத்தி கத்தி விசில் அடிப்பதும், கூண்டுக் கம்பிகளைத் தட்டுவதுமாக ஆரம்பிப்பார்கள். கூண்டைத் திறக்க அருகில் செல்லும் போதே இருவரும் தயாராக இருப்பார்கள். பாதி திறக்கும் போதே வெளயே வந்து விடவேண்டும். அவ்வளவு அவசரம்.

காலையில் பால்கனியிலிருந்து வெளியே போகும் பறவைகளுடன் உரையாடுவதும், நாங்கள் உண்ண அமர்ந்ததும் எங்கு இருந்தாலும் அவசர அவசரமாக வந்து எங்களுடன் உண்பதும். நாங்கள் அலுவலகம் கிளம்பும் நேரம் வந்துவிட்டால் எங்களைக் கிளம்ப விடாமல் எங்கள் மேல் ஏறுவதும், இறக்கி விட்டாலும், மறுபடியும் ஏறி ஏறி அடம் பிடிப்பதும், மாலை நான் வரும் நேரம் எங்கு இருந்தாலும் கூண்டிற்க்கு மேல் வந்து நான் வரும் வரை பாடிக் கொண்டே எனக்காக காத்திருப்பதும், வந்த உடன் என் தோலில் ஏறிக் கொண்டு என் காதைக் கடிப்பது, பாடுவது என்று ஒரு குழந்தை என்னவெல்லாம் செய்யுமோ அத்தனையும் செய்வார்கள். சனி, ஞாயிறுகளில் எங்களை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிய மாட்டார்கள். நாங்கள் உறங்கும் போது எங்கள் மேலே ஏறி அவர்களும் உறங்குவார்கள். அவர்கள் ஏழுந்து விட்டால் எங்களை எழுப்ப எங்கள் காது அருகி்ல் வந்து கத்தி எழுப்புவார்கள். அவர்களுக்கு முழிப்பு வந்து விட்டால் நாங்களும் எழுந்தே ஆக வேண்டும். ஆனால் எங்களுக்கு முழிப்பு வந்து அவர்களை எழுப்பினால் அவ்வளவு தான் இருவருக்கும் அவ்வளவு கோபம் வரும். அவர்கள் உறங்கி எழும் வரை நாங்களும் படுத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை எங்களுக்கு.

இவர்கள் சோம்பல் முறிக்கும் அழகும், கொட்டாவி விடும் அழகும் சொல்ல வார்த்தைகள் இல்லை. அதுவும் சந்தர்ப்பம் பார்த்து செய்யும் போது நமக்கு எப்படி இருக்கும் அதை மற்ற பதிவுகளில் சொல்கிறேன்.

இணையத்தில் இவர்களைப் போன்றவர்கள் ஹாப்பி பார்த்டே மற்றும் பல விதமான பாடல்களைப் பாடுவதைக் கேட்டு இவர்களுக்கும் அதை பயிற்றுவிக்க நினைத்தோம். பி3ல்லி சில பாடல்களைக் கேட்பதில் ஆர்வம் காட்டினானே தவிர பாடுவதில் ஆர்வம் இல்லை.  ஆனால் மில்லியோ பாடல்களைக் கேட்பதோடு இல்லாமல் அதைப் பாடவும் ஆரம்பித்தாள். அவளுடைய அபார முயற்சி விஸ்வரூப வெற்றியும் அடைந்தது.

இவர்கள் எப்படி கற்றார்கள். கற்கும் போது செய்யும் லீலைகளை இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

என்ன பதிவு குழப்புகிறதா? மில்லி பெண் என்று சொன்னாயே பின் எப்படி பாடுகிறாள்? என்று கேட்பது எனக்கு சத்தமாகவே கேட்கிறது. உங்களைப் போல் தான் நானும். இணையம் முழுவதும் அலசி விட்டேன். ஒரு இடத்தில் பெண் மிக மிக அரிதாக பாடும் என்று போட்டிருந்தார்கள். அட! நம் மி்ல்லி அந்த அரிய வகைப் பெண் போல என்று பெருமைக் கொண்டோம். ஆனால் பி3ல்லி பாடவே இல்லை.  சரி சின்னப் பையன் தானே வளருட்டும். இருவரும் சேர்ந்து நமக்கு கச்சேரியே செய்து காண்பிப்பார்கள் என்று நினைத்தோம். வீட்டிற்க்கு வந்து விட்டாலே பி3ல்லி, மில்லி என்று கொஞ்சவே நேரம் போதவில்லை எங்களுக்கு.

இந்த குழப்பத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார் அந்தக் கடைக்காரர். ஆம் உங்கள் யூகம் சரிதான். மில்லியை ஆண் என்றும், பி3ல்லியைப் பெண் என்றும் மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டார். என்னால் தான் தாங்கவே முடியவில்லை. அன்று இரவு முழுவதும் தூக்கமே இல்லை. ஒரு வேளை இருவருமே ஆணாக இருந்தால் என்ன ஆகி இருக்கும். கடந்த ஐந்து மாதங்களுக்கு மேல் மில்லியை அவள் என்றும், பி3ல்லியை அவன் என்றும் சொல்லிவிட்டு இப்படி மாற்றினால் எப்படி. இரண்டு தினம் புலம்பவும். டேய் பையா! என்று மில்லியையும், யேய் பெண்ணே! என்று பி3ல்லியையும் கூப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

கடைசியாக பெயரைக் கூட மாற்றி நல்ல நாளாக மறுபடியும் பார்த்து அவர்கள் காதில் ஓதிவிட்டோம். ஆமாம் இப்பொழுது பி3ல்லியை மில்லி என்றும், மில்லியை பி3ல்லி என்றும் அழைக்கிறோம். ரொம்ப கஷ்டமாகத் தான் இருக்கிறது. என்ன செய்ய. பெண்ணுக்கு பெண் பெயரும், ஆணுக்கு ஆண் பெயரும் வைப்பது தானே நியாயம். பி3ல்லி மில்லி என்றால் குரல் கொடுப்பார்கள். ஆனால் எந்த பெயர் யாருக்கு என்பது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை. எல்லாம் நன்மைக்கே!!



பி3ல்லி மில்லி உலகத்தில் நாங்கள்!! இன்னும் வரும்!!