01 January 2017

365 நாட்கள் பி3ல்லி மில்லியுடன் நாங்கள்!!


என்னது??? 2016 முடிந்து 2017 தொடங்கி விட்டதா?? அப்படி என்றால் இந்த  சுண்டான்கள் பி3ல்லியும் (Billy) மில்லியும் (Milly) வந்து ஒரு வருடம் ஆகி விட்டதா?? என் கணவரின் கைகளைக் கிள்ளிப் பார்க்கிறேன். ‘ஆஆஆ…’ என்று கத்தவும் ஒரு வருடம் முடிந்தது உறுதியே ஆகிவிட்டது. நாட்கள் போனதே தெரியவில்லை. ஒரு நாள், இல்லை இல்லை ஒரு நொடிப் போல் இருக்கிறது, அதற்குள் ஓர் ஆண்டா?? நம்பவே முடியவில்லை!!

பி3ல்லி மில்லியின் ஓர் ஆண்டு லீலைகளைப் பதியச் சொல்கிறார் என் கணவர். ஒர் ஆண்டு முடிந்ததையே நம்ப முடியாத எனக்கு எங்கு தொடங்குவது, எதை எழுதுவது, எதை விடுவது என்றே தெரியவில்லை.

முறையே 31/2 , 3 மாதத்தில் எங்களிடம் வந்தவர்கள் பி3ல்லியும் மில்லியும். சின்னக் குழந்தைகள். இவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சுதந்திரம் பறிப்போகக் கூடாது என்று பல எண்ணங்கள் எங்களுக்குள்.

வீட்டிற்க்கு வந்த புதுதில் கொஞ்சம் பயந்தார்கள். பின் எங்களுடன் நன்றாகவே ஒட்டிக் கொண்டார்கள். இப்பொழுது எல்லாம் எங்களைத் தவிர யாரிடமும் போக மறுக்கிறார்கள் எங்கள் செல்லக் குட்டிகள். முதலில் அவர்கள் தேவைகளைப் புரிந்துக் கொள்வதில் எங்களுக்கு மிகுந்த சிரமம் இருந்தது. ஒன்று, இரண்டு வயதுக் குழந்தைகள் தங்களுக்கு தேவையானதை எப்படித் தங்கள் பெற்றேருக்கு புரிய வைப்பார்களோ அப்படி தான் இவர்களும் எங்களுக்கு புரிய வைக்க ஆரம்பித்தார்கள். இன்று இவர்களுடைய பல செயல்களும் எங்களுக்கு புரிய ஆரம்பித்து விட்டது.(!!)

பெட்டியைத் தட்டிக் கொண்டும், கணக்கு எழுதிக் கொண்டும் இருந்த எங்களை பிரசவம் கூட பார்க்க வைத்து விட்டார்கள். பிரசவக் காலத்தில் அவர்கள் இருவரின் கடமை உணர்ச்சியையும், அவர்களின் புரிதல்களையும், அவர்களின் திட்டமிடலையும் பார்த்து நாங்கள் வியந்தே போனோம். குழந்தைகள் என்று நினைத்து, பிரசவத்தை எப்படி சமாளிப்பார்களோ?, முட்டையை சரியாக அடைக்காப்பார்களா? குட்டிக்கு உணவை எப்படி ஊட்டுவார்கள் என்று பயந்த எங்களுக்கு, ஏதோ மிகுந்த அனுபவம் உள்ளவர்களைப் போல அவர்கள் அத்தனையும் செய்த அழகு இருக்கிறதே எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை. காலை பொழுதொல்லாம் பி3ல்லியும், இரவு முழுவதும் மில்லியும் அடைக்காத்தார்கள்.  இவர்கள் ஒரே நாளில் எல்லா முட்டையையும் போடவில்லை. 48மணிக்கு ஒரு முறை ஒரு முட்டைப் போட்டாள் மில்லி. முட்டைப் போடும் முன் மில்லி அங்கும் இங்கும் வேகவேகமாக நடப்பாள். முட்டைப் போட தன்னை தயார் செய்து கொள்கிறாள். இந்த நாட்களில் அவர்கள் அருகில் கூட எங்களை அனுமதிக்கவில்லை இருவரும். உணவு, தண்ணீர் வைப்பதற்கு தவிர வேறு எதற்க்கும் எங்களுக்கு அனுமதி இல்லை.  இவ்வளவு ஞானம் எப்படி வந்தது. இயற்கையின் அதிசயம் தான் என்ன!!!

ஒருபுறம் சந்தேஷத்தையும் இன்னொருபுறம் சோகத்தையும் முதல் பிரசவத்தில் பார்க்க வைத்து விட்டரார்கள். போட்ட ஐந்து முட்டைகளில் இரண்டில் குட்டிகள். 21 நாட்கள் அடைகாத்து வந்த குட்டிகள். இவர்களுக்கு உணவு ஊட்டுவதும், மீதி இருந்த முட்டையை அடைக்காப்பதுமாக மிகவும் பிஸியாகி விட்டார்கள் இருவரும். குட்டி பிறந்து 21 நாட்கள் முடிந்த நிலையில் நாங்கள் ஆசையாக அவர்களை தூக்கிக் கொஞ்சினோம். எப்படி அது நிகழந்தது என்றே தெரியவில்லை மறுநாள் இரண்டு குட்டிகளில் ஒன்று இயற்க்கை ஏய்திருந்தது. தாங்கவே முடியாத சோகம் எங்களுக்கு. தவறு எங்களுடையதா என்றும் தெரியவில்லை. அவர்கள் இருவருக்கும் இது எவ்வளவு தூரம் பாதித்தது என்று அப்பொழுது எங்களுக்கு தெரியவில்லை. அதன் பாதிப்பாக இரண்டாம் பிரசவம் அடுத்த மூன்று மாதங்களில் .

ஆம் இன்று இவர்களுக்கு ஆண் (Belly) ஒன்று பெண் (Ellie) ஒன்று என இருக்குழந்தைகள். ஒரு வருடத்திற்க்குள் மாமனார் மாமியார் கூட ஆகி விட்டார்கள். ஆமாம் அவர்கள் மூத்த மகனு(Belly)க்கு பெண் (Jelly) பார்த்து திருமணமும் செய்தாகிவிட்டது.

பி3ல்லியின் திறமைக்கு ஓர் எடுத்துக்க்காட்டு. யுடியூப்(Youtube) ல் நிறைய பாடல்களைக் கேட்டு ஹாப்பி பர்த்டே, கார் ரிவர்ஸ் மட்டும் அல்லாமல் அதில் அவனுக்குப் பிடித்த வரிகளையும், சத்தத்தையும் வைத்து தனக்கென்று ஒரு பாடல், மெட்டு போட்டு அசத்துகிறான் பி3ல்லி.

வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் நாம் தான் முக்கியமான, விலைவுயர்ந்த பொருட்களை பத்திரமாக வைக்க வேண்டும் என்பார்கள். அஜாக்கிரதையாக இருந்தால் என்னவாகும் என இருவரும் எங்களுக்குப் புரிய வைத்தார்கள்.

என் கணவர் ஆபிஸ் மடிக்கணிணியில் வேலைப் பார்த்த்து அதை மூடாமல் சிறிது நேரம் வெளியே சென்று இருந்தோம். நாங்கள் எப்பொழுது கணிணியைத் திறந்தாலும் எங்களையேப் பார்த்துக் கொண்டு இருப்பான் பி3ல்லி. கீயை அழுத்த நாங்கள் சிரமப்படுவதாக நினைத்தானோ என்னவோ, நாங்கள் திரும்பி வருவதற்க்குள் 25 முதல் 30 கீகளை கடித்து எடுத்திருந்தான். எங்களைப் பார்த்ததும், வாயில் ஒரு கீயுடன் கொண்டை அப்படியே நிமிர்ந்து நிற்க பி3ல்லி திருதிரு என முழித்தது இன்றும் எங்களால் மறக்க முடியாது.

கீ மட்டும் அல்லாமல் மொபைல் சார்ஜ்ர், துணிக்காயப் போடும் கொடி, புத்தகங்கள், துணியில் இருக்கும் குச்சல் என்று சொல்லிமாளாது.

என் மொபைல் அலறினால் போதும், பி3ல்லியும், மில்லியும் நான் வரும் வரை அல்லது நான் ‘வந்துட்டேன்’னு சொல்லும் வரை விசில் அடித்துக் கொண்டே இருப்பார்கள். அதே போல் நான் அலுவலகம் விட்டு வரும் போது எங்கு இருந்தாலும் வாசலுக்கருகில் வந்து எனக்காக காத்துக் கொண்டு இருப்பார்கள். நான் கை, கால் கழுவும் வரை தான் அமைதியாய் இருப்பார்கள். அதற்க்குப்பின் இறக்கையை விரித்து, கழுத்தை மேலே தூக்கி, என்னை தூக்கச் சொல்வார்கள். அப்பொழுதும் தூக்காவிட்டால் பின்னாலேயே வந்து அடம்பிடிப்பார்கள்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்தால், முதலில் நலம் விசாரிப்பது இவர்களையே!!! சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டிற்க்கு மட்டும் அல்லாமல் இரயிலில் ஏறி மதுரை வரைக்கூட சென்று வந்து விட்டார்கள் இந்த சுண்டான்கள்!! இவர்கள் இரயில் பயணம் ஒரு தனிக் கதை. அதை மற்றுமொரு நாளில் தனி பதிவாகவே பதிகிறேன்.

இவர்களின் லீலைகளை எழுத ஆரம்பித்தால் எழுதிக் கொண்டே இருப்பேன். அதனால் இந்த பதிவை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இனி வரும் நாட்களில் இவர்கள் செய்யும் லீலைகளை முடிந்த மட்டும் பகிர்கிறேன்…..