15 April 2008

நேதாஜி மேர்ஸ்ஸீ ஹோம்

பள்ளி, கல்லூரி நாட்களில் விஷேச தினங்களில் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்தோ அல்லது தூங்கியோ பொழுதைக் கழிப்பதுண்டு. அப்போது எல்லாம் உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என்று தோன்றும். ஆனால் என்ன செய்வது, யாரிடம் கேட்பது என்று எதுவும் தெரியாது. வீட்டுக்குள்ளே ஒரு கிணற்றுத் தவளைப் போல வாழ்ந்துக் கொண்டிருந்த காலம் அது. வெளி உலகம் அவ்வளவாக பரிட்சியம் இல்லாத நேரம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை, ஒவ்வொரு விதமான பழக்க வழக்கங்கள் என்று எதையும் யோசித்துக் கூட பார்க்கத் தெரியாத ஒரு சாதாரண பெண் நான்!!

நினைத்தது நினைத்து முடிக்கும் முன்னரே எனக்குக் கிடைத்து விடும். ஆனால் இந்த ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கோ நினைக்கவே தெரியவில்லை. அப்படியே நினைத்தாலும் அது தானகவே மறக்கும் வரை கிடைப்பதும் இல்லை. ஒவ்வொரு பிஞ்சுக்களின் பின்னாலும் எத்தனை எத்தனை சோகக் கதைகள். போதைக்கு அடிமையான பெற்றோர், எய்ட்ஸ் வந்த பெற்றோர். இன்னும் கொடுமையாக இவர் தான் தாய், தந்தை என்றே தெரியாத பிஞ்சுக் குழந்தைகள்!!

அப்படிப் பட்டக் குழந்தைகள் உள்ள ஒரு இல்லம் தான் நேதாஜி மேர்ஸு ஹோம். இந்தக் குழந்தைகளுக்கு தமிழ் புத்தாண்டு அன்று மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அவர்களுக்கு அசைவம் தான் பிடிக்கும் என்பதால் நல்ல நாளாக இருந்தாலும் பரவாயில்லை என்று அதற்கே ஏற்பாடு செய்து விட்டோம்.

மதிய உணவுக்கு வரிசையாக அமர்ந்து இருந்தார்கள். 2 1/2 வயது முதல் 15 வயது வரை மொத்தம் 26 குழந்தைகள். ஒவ்வொருவரிடமும் அவர்கள் பெயரைக் கேட்டுக் கொண்டுருந்தேன். அதில் ஒரு சிறுவன் எனக்கு 'டோலு, டோலு' பாடத் தெரியும் என்று பாடியும் காட்டினான். அவன் அருகில் இன்னொருக்குட்டி என்னையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் என்னிடம் பேச மாட்டானாம். அவனுக்கு அடிப்பட்டு இருப்பதாகவும், அவன் பெயர் 'சூரியா' என்று குழந்தைகளுக்கே உரிய தோணியில் அட்டகாச அறிமுகம் செய்து வைத்தான் நம் 'டோலு, டோலு' சுட்டி. என்னையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்த சூரியா, அடிப்பட்ட கையைக் காட்டி 'வலிக்குது' என்று மட்டும் சொன்னான். உண்மையில் எனக்கு மிகவும் கஷ்டமாகி விட்டது. எனக்கு சின்னதாக காயம் பட்டாலே அழுது ஆர்பாட்டம் செய்து என் பெற்றோரை ஒரு வழி ஆக்கி விடுவேன். பெற்றோரே இல்லாத இவர்கள் தனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் கூட எப்படி சொல்வது, சொன்னால் திட்டு விழுமோ என்று பயந்து பொறுத்துக் கொள்கிறார்களே உண்மையிலேயே நான் இவர்களிடம கற்க நிறைய இருக்கிறது.

அந்த பிஞ்சுக்குழந்தைகள் யார் உதவியும் இன்றி தாமாகவே மிகவும் அழகாக சாப்பிட்டார்கள். இந்த வயதிலும் எனக்கு மீன் சாப்பிடத் தெரியாது. ஒரே ஒரு முள் இருந்தால் மட்டுமே சாப்பிடுவேன். ஆனால் அந்த குழந்தைகள் எவ்வளவு அழகாக சாப்பிட்டார்கள் தெரியுமா? அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து என் தம்பி 'எப்ப நீத்து நீங்க இப்படி சாப்பிடுவீங்கன்னு' கிண்டல் வேறு.

இந்த இல்லத்தின் குட்டி மற்றும் செல்லப் பெண் 'சிந்து'. மிகவும் அழகாக நடனம் ஆடிகிறாள். யாரிடமும் கற்காமல் அவளாகவே ஆடுகிறாளாம். அசத்தல் தான் போங்க!!

விடைபொறும் பொழுது எனக்கு சூரியாவை எப்படியாவது பேச வைத்து விட வேண்டும் என்று என்னனவொ செய்தேன். என்ன் வேணும் உனக்கு என்று நான் கேட்டவுடன் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு அவன் சொன்ன வார்த்தை 'அம்மா'.. என்ன பதில் சொல்ல நான்???? அவன் கேட்ட இன்னொன்று 'மிட்டாய்'. அதையும் என்னால் வாங்கிக் கொடுக்க முடியாமல் போய் விட்டது...

இப்படி ஒரு நெகிழ்ச்சியான அனுபவம் கிடைக்க உதவிய கார்த்திக் குமாருக்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.. நன்றி கார்த்திக்!!



வலது ஒரத்தில் நம் டோலு, டோலு.அவன் வலது பக்கத்தில் நில நிறச் சட்டையில் 'சூரியா






ரோஸ் நிற உடையில் நம்மைப் பார்க்கும் 'சிந்து'