30 March 2012

வாங்கிக் கட்டிக் கொண்டேன்!!

சென்னையில் பஸ்லில் அலுவலகம் போவது என்பதே பெரிய வித்தைத் தான். கூட்ட நெரிசலில் - காலை எங்கே வைப்பது, கையை எங்கே பிடிப்பது, கைப்பையை எங்கே வைப்பது, சாப்பாட்டுப் பை எங்கே மாட்டிக் கொண்டதோ, இது தான் வாய்ப்பு என்று இடிக்கும் இடி மன்னர்கள் தொல்லை, டிக்கெட் வாங்க முடியாமல் தவிப்பது என பல கஷ்டத்தில் பெருங்குடியில் இருந்த போது என் பஸ் பயணம் இருந்ததுஇப்போது வீடு வேளச்சேரியில். பஸ் பயணம் இல்லை. இரயில் பயணம் தான். மகளிருக்கான தனி பெட்டியில் செல்வதால் பெரிய பிரச்சனை இல்லை. நிறைய பெட்டி இருப்பதால் கூட்டம் இருந்தாலும் பஸ் போன்ற நெரிசல் இல்லை.சீசன் டிக்கெட் மாதம்தொரும் வாங்கிவிடுவதால் டிக்கெட் வாங்கும் பிரச்சனையும் இல்லாமல் நாட்கள் நன்றாகப் போய்க் கொண்டு இருந்தது.

இன்றும் இப்படித் தான். காலையில் சீக்கிரமே இரயில் நிலையம் சென்று விட்டேன். அப்பொழுது தான் ஒரு இரயில் வந்து சென்றதால் எங்கும் கூட்டம் இல்லை. என் சீசன் டிக்கெட் வேறு முடியும் நிலையில் இருந்தது. டிக்கெட் கவுண்டரிலும் கூட்டம் அதிகம் இல்லை. மூன்றுப் பேர் தான் வரிசையில் நின்றிருந்தார்கள். டிக்கெட் வாங்கி விடலாம் என்று நினைத்து,நான்காவதாகப் போய் நின்றேன். முதலில் நின்றவர் வேகமாக டிக்கெட் வாங்கி விட்டுச் சென்றுவிட்டார். இரண்டாவது நபரோ அங்கே இருந்து இங்கே, இங்கே இருந்து அங்கே என்று நிறைய டிக்கெட் வாங்குகிறேன் என்று குறைந்த பட்சம் நான்கு ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டுவிட்டார். மூன்றாவது நபர்இரண்டு நிமிடம் மட்டும் எடுத்துக் கொண்டார். அடுத்து என் முறை.

நான் கவுண்டர் அருகில் சென்று என் பழைய சீசன் டிக்கெட்டை எடுத்து நீட்டி ஏப்ரல் ஒண்ணாம் தேதியில் இருந்து ஒரு மாதம் ரிணிவல் செய்ய வேண்டும் என்றேன். அவரும் சரி என்று வாங்கிக் கொண்டார். கையில் வைத்து கண்களுக்குஅருகே ஒருதரம், கண்களுக்கு அப்பால் ஒருதரம் என்று மாற்றி மாற்றி பார்த்தார். பார்த்த அவருக்கு வயது அநேகமாக ஓய்வு பெறும் வயதுக்கு அருகில் இருக்கும். அதனால் பார்ப்பதற்கு சிரமப்படுகிறாரே என்று நினைத்து 'நிவேதிதா' என்று என் பெயரைச் சென்னேன். கேட்டதும் என்னை ஒரு முறைபார்த்துவிட்டு மறுபடியும் முன்னர் சென்னபடியே கண்களுக்கு அருகே ஒருதரம், கண்களுக்கு அப்பால் ஒருதரம் என்று மாற்றி மாற்றி பார்க்க ஆரம்பித்தார். பின்னால் பார்த்தால் இத்தனை நேரம் இல்லாத நீண்ட வரிசை. இப்போது அவர்பெயரைப் படித்துவிட்டார் போலும், தட்டச்சு செய்ய ஆரம்பித்திருந்தார். என்னுடைய பெயரில் உள்ள பத்து எழுத்துக்களையும் ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சில் தேடியும், நான் கொடுத்த டிக்கட்டைப் பார்த்தும் அடித்துக்கொண்டிருந்தார். பின்னால் நின்ற கூட்டத்தைப் பார்த்து நான் அவருக்கு உதவ நினைத்து ஒவ்வொரு எழுத்தாக சொன்னால் மனிதர் இந்த முறை என்னைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. ஒரு வழியாக அடித்தப்பின்னும் சரியாக வரவில்லை போலும் மறுபடியும் முயற்ச்சித்தார். மறுபடியும் தோல்வி தான். இப்படியே நான்கு, ஐந்து நிமிடங்கள் சென்றன. நிமிடங்கள் தான் சென்றதே ஒழிய அவரால் என் தகவலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்போது கூட்டம் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டது. இப்பொழுது தான் சீசன் டிக்கெட் வாங்க வேண்டுமா? நல்ல நேரம் பார்த்து வர்ங்கப்பா!! என்று என்னை வசைப்பாட ஆரம்பித்தது. அந்த பெரிய மனிதரோ அவருக்கே உரிய குணமான பெறுமை குணத்துடன் மிகப் பொறுமையாகத் தேடிக் கொண்டேயிருந்தார். உச்சக் கட்டமாக அடுத்த இரயிலும் வந்து விட்டது. வரிசையில் இருந்த அனைவரும் என்னையும் சேர்த்து டென்ஷன் ஆகிவிட்டோம். பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி அவரிடம் இருந்து என் சீசன் டிக்கெட்டைத் திரும்ப பெற்றுவிடலாமா என்று யோசித்த வேளையில் அந்த மனிதர் அடுத்தக் கவுண்டரில் இருந்த அதிகாரியிடம் கேட்டு பின் சில பல பட்டன்களை தட்டச்சில் தட்டி ஒரு வழியாக எனக்கு சீசன் டிக்கெட் கொடுத்துவிட்டார்.

நானும் வாங்கிக் கொண்டு தயாரக நின்றிருந்த இரயிலில் ஏறிய பின் யேசிக்கிறேன். கூட்டம் இல்லாததால் டிக்கெட் வாங்கலாம் என்று நினைத்தது ஒரு குற்றமா? என்னால் இத்தனைப் பேருக்கு டென்ஷன். இந்த டென்ஷன், கோபம் எல்லாம் என்னால் மட்டுமா? காலை நேர பரபரப்பில் வேகமாக வேலை செய்யாத அந்த அதிகாரியின் குற்றமா? சீசன் டிக்கெட் வாங்குவதற்கு என்று தனிக் கவுண்டர் வைக்காத இரயில்வே நிர்வாகத்தின் குற்றமா?

பஸ்ஸில் பலர் சீசன் டிக்கெட் வாங்குவதில்லை. ஆனால் இரயிலில் வரும் நூற்றுக்கு எழுபத்தைந்து சதவீதம் பேர் சீசன் டிக்கெட் எடுக்கிறார்கள். எல்லா நாட்களில் முடியாவிட்டாலும் மாதத்தின் கடைசி வாரம் முதல் மாதத்தின் முதல் வாரம் வரை ஒரு தனி கவுண்டர் திறந்தால் என் போன்ற பலரும் பயணடைவார்கள். இரயில்வே நிற்வாகம் கவனிக்குமா??

No comments: