Showing posts with label ஏர்டெல் சுப்பர் சிங்கர் ஜுனியர். Show all posts
Showing posts with label ஏர்டெல் சுப்பர் சிங்கர் ஜுனியர். Show all posts

14 July 2007

ஏர்டெல் சுப்பர் சிங்கர் ஜுனியர்!


மெகா சீரியலால் தமிழகத்தின் இல்லத்தரசிகளைக் கட்டிப் போட்டு, அதனால் இல்லத்தரசர்களின் கோபத்துக்கு ஆளாகிக் கொண்டு இருக்கும் சின்னத்திரைகளின் மத்தியில் விஜய் டிவி உண்மையில் ஒரு புதிய சாதனைப் புரிந்து இல்லத்தரசி, இல்லத்தரசர்கள் மட்டும் இல்லாமல் அனைவரையும் கட்டிப் போட்டு விட்டது.

வாழ்த்துகள் விஜய் டிவி மற்றும் ஏர்டெல்!!!

இளங்கன்று பயமறியாது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்!!

ஒரே நாளில், ஒரே பாடலில் ஒருவர் புகழின் உச்சிக்குப் போவது என்பது சினிமாவில் மட்டும் தான் சாத்தியம் என்பதை இந்த செல்லக் குழந்தைகள் முறியடித்து நிஜத்தில் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!

கிருஷ்ண மூர்த்தி - சென்னை தளபதி, குட்டி வித்வான் என்று பல பட்டப்பெயர்களுக்குச் சொந்தக்காரனாகி தமிழக மக்களின் மொத்த மனதையும் தன் குரலால் கட்டிப் போட்டிருக்கிறான். கடைசி சுற்றில் அவன் பாடிய 'சங்கீத ஜாதி முல்லை.................' உண்மையாகவே சொல்கிறேன் S.P.B. கேட்டிருந்தால் சந்தேஷத்தில் ஆனந்தக் கண்ணீர் விட்டிருப்பார். அவ்வளவு அருமை!! குடும்பத்தின் வறுமையையும் பெருட்படுத்தாமல் அவன் பெற்றோர் அவனுக்கு அளித்திருக்கும் இந்த பயிற்சிக்கு நான் தலை வணங்குகிறேன்.

விக்னேஷ் - ஜுனியர் மாஸ்டர், பட்டனத்து பண்டிதன் போன்ற பல பட்டங்களுக்குச் சொந்தக்காரன். இவன் குரல் மட்டும் இல்லாமல் இவனுடைய துணிச்சல், வேடிக்கையாக அவன் செய்யும் அங்க அசைவுகள் எல்லாமே நம் மனதைக் கொள்ளைக் கொள்கின்றன. சூப்பர்ர்ப் விக்னேஷ்!!!

இனிமையான குரல் யாரையும் கட்டிப்போட்டு விடும் என்பதற்கு விக்னேஷின் நண்பன் ஓர் சிறந்த உதாரணம். இரண்டு வருடம் சுய நினைவின்றி கிடந்த போதும் அவன் தாய், தந்தை பெயர் கூட இன்னும் தெரியாத நிலையிலும் அவன் விக்னேஷை மட்டும் நினைவில் வைத்திருப்பதற்கு அவன் இசை மிக முக்கிய காரணமாக இருந்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இனிய குரல், இசை - பாறாங்கல் போன்ற மனதையும் உருக்கிவிடும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

சாய்ஷரன் - பைனலுக்கு வரமுடியாவிட்டாலும் தன்னை தேற்கடித்த தன் நண்பனுக்கு (விக்னேஷ்க்கு) வாழ்த்து கூறியது உண்மையிலேயே என்னை நெகிழ வைத்து விட்டது. இத்தனை வயதாகியும் எனக்கு Maturity வரவில்லை என்று என் உயிர் நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார். ஆனால் இந்த குட்டிப் பயலுக்கு இந்த வயதில் எத்தனை Maturity. Great!!!


வாழ்த்துக்கள் கிருஷ்ண மூர்த்தி, விக்னேஷ் மற்றும் சாய்ஷரன்!!