Showing posts with label லைசன்ஸ். Show all posts
Showing posts with label லைசன்ஸ். Show all posts

03 June 2008

லைசன்ஸ் வாங்கியாச்சா??

ஒரு வழியா நானும் கார் ஓட்டக் கத்துக்கிட்டு லைசன்ஸ் வாங்கியாச்சு!!

முன்னல்லாம் LLR வாங்க RTO ஆபிஸ் போனா ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்துபவர்களோ இல்லை மற்றவரிடமோ கேட்டு LLR தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை அளிப்பார்கள்.. ஆனால் இப்போது அது எல்லாம் முடியாது. தற்போது LLRக்கு ஆன்லைன் தேர்வு முறை வந்து விட்டது. அதாவது LLR வாங்கும் நபர் தானே கணிணியின் முன் அமர்ந்து அவருக்குக் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். முன்னே எழுதியவரிடம் எல்லாம் கேட்க முடியாது. ஆமாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேள்வி அல்லவா இருக்கும். அதனால் கேட்டு எல்லாம் எழுத முடியாது.சாலை விதிகள் தெரிந்திருந்தால் மட்டுமே LLR. அதுவும் 10 கேள்விகளில் 8 கேள்விக்காவது சரியாக விடை அளித்திருக்க வேண்டும்.இந்த முறையை நான் வரவேற்கிறேன். ஆமாம் மக்கள் இதற்காகவாவது சாலை விதிகளை அறிந்துக் கொள்வார்களே!! நானும் இரு சக்கர வாகனத்திற்கு லைசன்ஸ் வாங்க வேண்டும். அதனால் தான் சாலை விதிகளைத் தேடித் தேடிப் படித்துக் கொண்டுருக்கிறேன்.

இந்த இரு சக்கர வாகனங்களுக்கு 8 போடச் சொல்வது போல் நான்கு சக்கர வாகனத்திற்கு 'H' போட சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும். கேரளாவில் உள்ள இந்த முறையைத் தமிழ் நாட்டிலும் பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும். முறைக்காதீர்கள் 'H' போடுவது கஷ்டம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இப்பொழுது தேர்வு எப்படி நடக்கிறது தெரியுமா?

தேர்வு நடப்பது பீச் ரோட்டில். நல்ல நீளமான ரோடு. ஒரு தடவைக்கு 4 நபர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். இதில் நீங்கள் முதல் மூன்று பேரில் நீங்கள் ஒருவராக இருந்தால் கவலையே இல்லை உங்களுக்கு. ஆமாம் நீங்கள் வண்டியை முதல் கியரில் கிளப்பி, 2, 3, 4 என மாற்றி ஓட்டிக் காண்பித்தாலே போதும். லைசன்ஸ் உறுதி. ஆனால் இந்த நான்காம் நபரின் நிலமை தான் கொஞ்சம் கஷ்டம்.

ஆமாம் மூன்று பேர் ஆளுக்கு 3 அல்லது 4 நிமிடம் ஓட்டி இருந்தாலும் வண்டி ஒரு கட்டத்தில் திருப்பும் கட்டாயத்திற்கு வந்து விடும் அல்லவா? அதனால் மாட்டப் போவது அந்த நான்காவது நபராகத் தானே இருக்கும். கிளட்சு, பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி, முதல் கியர் போட்டு, ஸ்டியரிங்கை வலப் பக்கம் திருப்பி, கிளட்சிலேயே வண்டியை சிறுது தூரம் நகர்த்தி, பின் ரிவர்ஸ் கியர் போட்டு அப்பா சாமி எழுதுறப்போவே கண்ணக்கட்டுதே......

இதை வைத்து அவர்கள் எப்படித்தான் முடிவு செய்கிறார்களோ, தெரியவில்லை. அந்த மூன்று பேருக்கும் இதில் தகராறு இருக்கும் பட்சத்தில் நிலமை என்னாகும்?? சரி இப்ப என்ன ஆச்சு?? ஏன் இப்படி புலம்புகிறேன்னு கேட்பது காதில் விழுகிறது. அந்த நான்காம் நபர் நான் தான். :)

போராட்டமே வாழ்கையாகி விட்டது. எதுவும் எனக்கு போராடாமல் கிடைத்ததில்லை. ஆனாலும் இந்த போராட்டம் எனக்குப் பிடித்திருக்கிறது.

கஷ்டப் படாமல் கிடைப்பது என்றும் நிலைக்காது.
கஷ்டப்பட்டு அடைவது என்றும் நம்மை விட்டுப் போகாது அல்லவா..

விடாமல் முயன்றுக் கொண்டேயிருங்கள் நிச்சயம் ஒரு நாள் வெற்றிக் கிட்டும்...