18 November 2006

வளர்ந்த நாடுகளில் இந்தியா!!

நான் போன வாரம் பெங்களுர் போயிருந்தேன் இரண்டு காரணங்களுக்காக. முதல் காரணம் என் நண்பர்களை சந்திக்க. இரண்டாவது காரணம் என் தங்கையின் M.Phill பிராஜக்ட் தேட.(முக்கியமானத இரண்டாவதா போட்டதுக்கு யாரு திட்டுறாங்களோ இல்லையோ என் தங்கை நிச்சயம் திட்டுவா!! )

பெங்களுர் போகும் போது நிச்சயம் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டேன் இப்படி ஒரு உலகத்தை பெங்களுரில் பார்ப்பேன் என்று. உண்மையிலேயே நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என் தங்கையின் இரண்டு நண்பர்களுக்கு. நன்றி திருலோக், விவேக்.

பெங்களுரில் நானும் குறைந்தது 6 மாத காலம் இருந்திருப்பேன் வேலை தேட. நான் நன்றாக ஊர் சுற்றுவேன். ஊர் சுற்ற நேரம் காலம், சோர்வு என்று எதைப் பற்றியும் கவலைப் பட்டதில்லை. கூப்பிட்ட உடனே கிளம்பி விடுவேன். அவ்வளவு ஆர்வம் ஊர் சுற்றுவதில் எனக்கு!! இந்த வேலை தேடும் நேரம் போக மிச்ச நேரங்களில் பெங்களுரைச் சுற்றியிருக்கிறேன். நிறைய இடங்கள். பிரிகேட் ரோட், லால் பார்க், இஸ்கான் ................. ஆனால் இப்படி ஒரு இடம் பெங்களுரில் நான் நினைத்துக் கூட பார்த்தில்லை. உண்மையிலேயே சூப்ப்ப்பபர்!!

மெஜஸ்டிக்கில் இருந்து 1 1/2 மணி நேர பயணத்தில் இருந்தது ஜக்குர். Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research(GKVK). இங்கே நிறைய ஆராய்ச்சி எல்லாம் பண்றாங்க. இந்த இடமே ரொம்ப ரொம்ப ரம்மியமா இருந்தது. நீர் வீழ்ச்சி, விதவிதமான மலர்ன்னு சுற்றுப்புறமே சூப்பரா இருந்தது. இப்படி இதமான சுழ்நிலையில் எவ்வளவு நேரம் வேலை பார்த்தாலும் நமக்கு சோர்வே வராது. அங்கே வேலை பார்ப்பவர்கள் அந்த இடத்தை விட்டு எதற்காகவும் வெளியே செல்லக் கூட தேவையே இல்லாத அளவு எல்லா வசதியும் உள்ளேயே செய்திருக்கிறார்கள். இந்தியாவில் திறமைசாலிகளுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போக அவர்களுடைய சுற்றுப்புறமும், சுழ்நிலைகளுமே சில நேரங்களில் காரணமாக அமைந்து விடுகிறது. இதற்கு நேர்மாறக இருந்தது JNC. நல்ல ஒரு முன்னேற்றம்.

அங்கே இருந்து நாங்கள் சென்ற இடம் NCBS. உண்மையில் நான் இந்தியாவின் ஒரு பகுதியில் தான் இருக்கிறேனா என்ற சந்தேகமே வரும் அளவுக்கு வியப்பு தாங்க முடியவில்லை!! போட்டோ பிடிக்காமல் போய்விட்டேனேன்னு இன்றும் வருந்துகிறேன்!! அங்கே எங்கே பார்த்தாலும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள். ஆனா, நாம சினிமாவில் பார்க்கிறது மாதிரி எல்லாம் யாருமே குறுந்தாடி வச்சிக்கிட்டோ, கறுப்பு கோட்டு சூட்டுன்னு எல்லாம் போடலை!! சினிமாவில் ரொம்ப தான் பில்டப் பண்றாங்கப்பா!! இங்கேயும் சகலமும் உள்ளேயே இருக்கு. இங்கு இருக்கிறவங்க தங்க இடம்ன்னு எல்லாமே உள்ளேயே இருக்கு. சமைக்க கூட தேவையேயில்லை!! அங்க மேஸ்ல சாப்பாடு சுப்பரா இருக்கு. அதுவும் குறைந்த விலையில். என்னடா இன்னும் சாப்பாட பத்தி எதுவும் எழுதலேயேன்னு என் நண்பர்கள் வருந்த கூடாது இல்ல, அதான் எழுதிட்டேன்!! ;-) அப்புறம் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகணும், என்னான்ன இங்க வேலை பார்க்கிறவங்க இந்த நேரம் தான் வரணும், இந்த நேரத்தில் தான் வேலை பார்க்கணும்னுங்கற கட்டாயம் எல்லாம் இல்ல. அவங்க இஷ்ட பட்ட நேரத்தில வரலாம், வேலை பார்க்கலாம்ன்னு நினைச்சா பார்க்கலாம், இல்ல விளையாடணும்னு நினைச்சா அதுக்கும் ஆயிரக்கணக்கில இடத்த விட்டு ஒவ்வொரு விளையாட்டுக்கும் தேவையான எல்லா வசதியும் செய்திருக்கிறார்கள். நானும் முன்பு யோசித்திருக்கிறேன், நமக்கு இப்படி எல்லாம் சுதந்திரம் கொடுத்தால் அதை சரியாக பயன்படுத்துவோமா?? நாம் தான் எதை செய்யாதேன்னு சொல்றாங்களோ அதை மட்டும் தானே செய்வோம். இந்த கல்வி முறையை நானும் எதிர்த்திருக்கிறேன். அதே சமயம் வெளி நாடுகளில் உள்ள கல்வி முறை நமக்கு ஒத்து வருமான்னு யோசித்தும் இருக்கிறேன். ஆனால் எதுவும் முடியும்ன்னு இவர்கள் நிருபித்து இருக்கிறார்கள்!! நம் கல்வி முறையிலேயே ஊறி வளர்ந்த இவர்களுக்கே இது சாத்தியம் ஆகிறது என்றால் அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் சாத்தியமே!! இன்னொரு முக்கியமான விஷயம், சொல்ல மறந்திட்டேன். அது என்னான்ன, NCBSல, இருந்து Ph.d பண்ண வெளிநாடு போனவங்க அந்த நாட்டு பெண்ணுங்களை கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்காங்களா! அதனால தானொ என்னவோ அவங்க குழந்தைகளை பார்க்கிறப்போ நாம இருக்கிறது இந்தியா தானான்னு ஒரு சந்தேகமே வந்திருச்சி!! பெங்களுரே அப்படித் தானே!! இங்கே என்னான்னு கேட்கிறீங்களா????

அடுத்து நாங்க போனது university of agriculture sciences. எனக்கு தோட்டக்கலையில் கொஞ்சம் ஆர்வம் ஜாஸ்தி!!! நானும் என் வீட்டில் நிறைய செடி, கொடிகளை வளர்க்கிறேன். என் நெருங்கிய நண்பர்களில் இவர்களும் (என் செடி, கொடிகளும்) உண்டு!! நான் என் சந்தேசம், வருத்தம் எல்லாவற்றையும் அதனுடன் பகிர்ந்திருக்கிறேன். நிறைய பேர் என்னை கிண்டல் கூட செய்திருக்கிறார்கள். நான் கவலை பட்டதில்லை!! அவர்களுக்கு புரியவைக்க முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் பல முறை என் முயற்சி வீணாகியிருக்கிறது!! இங்கு, நிறைய பேர் இந்த மரம், செடிகளோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். வேரோடு கொண்டு வைத்தாலே ஒரு செடி வளர எவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறது. வந்து விடு எனக்காக என்று என்னை தினமும் கெஞ்ச வைத்த செடியும் என்னிடம் உண்டு. அதே சமயம் எவ்வளவு கெஞ்சியும் வராமல் என்னை 3 வருடம் காக்க வைத்து இன்று தினமும் நான் ஆபிஸ் விட்டு வரும் போது என்னை தன் வாசமுள்ள மலர்களால் வரவேற்கும் பவளமல்லியும் உண்டு. ஆனால் இங்கு என்னடாவென்றால் ஒரே ஒரு இலையை வைத்து ஒரு செடியை உருவாக்கும் முயற்சி நடக்கிறது!! மரம், செடிகளுக்கும் உயிர், உணர்வு இருப்பதை இங்கே வந்தால் நாம் உணர்வு பூர்வமாக அனுபவிக்கலாம்!!

இதை எல்லாம் பார்க்கும் போது வளர்ந்த நாடுகளில் இந்தியா என்று சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை!! என்ன என் தலைப்பு சரி தானே??