26 December 2014

மூடு வாயை!


                லிங்கா படம் பார்க்க நான் என் மனைவியையும், என் மகள் அவந்திகாவையும் அழைத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறினேன். பஸ்ஸில் நல்ல கூட்டம்.

                இப்பொழுது தான் பேசத் தொடங்கியிருக்கும் என் மகள் வாய் ஓயாமல் கேள்விகள் கேட்டுக் கொண்டும், பேசிக் கொண்டும் வந்தாள்நிற்கக் கூட இடம் இல்லாமல் அவளையும் தூக்கிக் கொண்ட நின்ற எனக்கு என் மகளின் மழலைப் பேச்சு பிடித்திருந்தாலும் கூட்ட நெரிசலில் அவள் பேச்சு என்னைக் கோபப்படுத்தி, என் மகளைப் பார்த்து, 'படம் பார்த்து வீடு திரும்பும் வரை வாயேத் திறக்கக் கூடாது. மூடு வாயை! திறந்தே அவ்வளவு தான் ' என்றேன் சற்று கோபமாக. சிறிது தூரம் சென்றதும் ஏதோ சொல்ல வந்த என் மகளை என் கோபப் பார்வைத் தடுத்து நிறுத்தியது.

                இரண்டு நிறுத்தம் சென்றதும் அமர இடம் கிடைத்தது. அப்பொழுது தான் கவனித்தேன் என் மகள் அணிந்திருந்த அரை சவரன்  மேதிரத்தைக் காணவில்லை என்று. பஸ்ஸில் கீழே விழுந்து விட்டதோ என்று தேடினோம். ஆனால் கிடைக்கவில்லை.

                என் மகளிடம் மோதிரம் எங்கே? என்று கேட்க அவள் வாயைத் திறக்கவில்லை. வாயைத் திறந்து சொல்லு என்று நான் அதட்ட, 'நீங்க தானே வாயைத் திறந்தா அடிப்பேன்னு சென்னீங்க. அந்த அங்கிள் என் மேதிரத்தை எடுத்துட்டுப் போயிட்டாரு' ன்னு மழலையில் சொன்ன என் மகளைப் பார்த்து  வாய் மூடி நின்றேன்.


                லிங்காவால் 40 கோடி நஷ்டம் என்பது உண்மையோ இல்லையோ எனக்கு (என் வார்த்தையால்) அரை சவரன் நஷ்டம் உண்மைங்க!!

24 December 2014

போ டாடி போ....

           
      அலுவலகம் முடிந்து வந்ததும்  வராததுமாக என் மனைவி எங்கள் மூன்று வயது மகள் அவந்திகாவைப் பற்றி தன் புலம்பலைத் தொடங்கிவிட்டாள்.

இங்க பாரும்மா! அவ குழந்தை. அப்படித்தான் இருப்ப. நாமத் தான் மெதுவாகச் சொல்லி புரிய வைக்கணும்மன்னு சொன்னேன். அதற்கு என் மனைவி, அவளுக்கு வாய் ஜாஸ்தியாயிடுச்சுங்க. மூணு வயசுப் பெண்ணு மாதிரியா பேசுறா? என்னால் முடியாது, முடிந்தால் இன்னக்கி நீங்க அவளுக்கு கதை சொல்லி தூங்கவையுங்க பார்ப்போம்ன்னு சொல்லிட்டுத் தூங்கப் போயிட்டா...

டிவியில் மூழ்கி இருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு படுக்கைக்குப் போய் கதைச் சொல்லத் தொடங்கினேன். 'ஒரு ஊருல ஒரு பாட்டி..' என்று தொடங்கிய உடனே போர் டாடி எனச் சொன்னாள் என் மகள். சரி என்று 'ஒரு ஊருல ஒரு காக்கா..' என்று தொடங்கிய உடனே மறுபடியும் போர் டாடி எனச் சொன்னாள். சரி என்று எனக்கு என் பாட்டி சொன்ன கதை எல்லாம் சொல்லிவிட்டேன். அனைத்துக்கும் போர் போர் என்று சொன்ன என் மகள், 'போ டாடி போ' இது எல்லாம் பழசுக் கண்ணா பழசு. சுட்டி டிவி, பேபி டிவி பாரு எல்லாக் கதையும் புதுசுக் கண்ணா புதுசு என்று சொன்ன என் மகள் அவந்திகாவையும், என் மனைவியின் புலம்பலையும் நினைத்து திகைத்து நின்றேன்.