31 December 2008

நடக்கட்டும் நடக்கட்டும்!!

புத்தாண்டு பிறக்கப் போகிறது
இனி நடப்பது எல்லாம் நல்லப் படியாக நடக்கட்டும்

உண்ண உணவின்றி தவிப்போர்க்கு நல்ல உணவு கிடைக்கட்டும்
இருக்க இடமின்றி தவிப்போர்க்கு நல்ல இருப்பிடம் கிடைக்கட்டும்
வேலையின்றி தவிப்போர்க்கு நல்ல வேலைக் கிடைக்கட்டும்
வேலையில் இருந்தும் வேலையில்லாமல் தவிப்போர்க்கும் நல்ல வேலைக் கிடைக்கட்டும்

நாட்டில் விலைவாசி குறையட்டும்
இல்லோர் இல்லாமலே போகட்டும்
நல்லோர் நலமுடன் வாழட்டும்
நாட்டில் கல்வியாளர் பெருக்கட்டும்

கன்னியருக்கு மணவாழ்க்கை அமையட்டும்
மணமானோருக்கு மகப்பேரு கிட்டட்டும்
குழந்தைகளுக்கு பள்ளியில் அனுமதி கிடைக்கட்டும்
வீட்டில் என்றும் அமைதி நிலவட்டும்

நடக்கட்டும் நடக்கட்டும் எல்லாம் நல்ல படியாக நடக்கட்டும்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

03 December 2008

தர்மம்!!

கேட்டு வாங்குபவன் பிச்சைக்காரன்
கேட்காமலேயே எடுத்துக் கொள்பவன் பஸ் கண்டக்டர்.

31 October 2008

அன்றும் இன்றும்

அன்று,

காலை எழுந்தவுடன் கணிணி - பின்பு
சுகமான ஒரு குளியல்.
கனிவுடன் அம்மா கொடுக்கும் நல்ல சாப்பாடு
பகல் முழுதும் அலுவலகம்
மாலை நண்பர்களுடன் நல்ல அரட்டை
இரவு முழுதும் நல்ல உறக்கும் என்று
வாழ்ந்தது நான் திருமதி ஆவதற்கு முன்பு..

இன்று,

காலை எழுந்தவுடன் சமையல் - பின்பு
அவசரமாய் ஒரு குளியல்.
கனிவுடன் நானே சமைத்த (நல்ல) சாப்பாடு
பகல் முழுதும் அலுவலகம்
பாதி இரவு அடுத்த நாளைய சிந்தனை
மீதி இரவு சிறிது நேரம் நல்ல உறக்கும் என்று
வாழ்வது நான் திருமதி ஆன பின்பு..

27 August 2008

திருமண அழைப்பு

என் மண நாளை என்னை விட அதிக ஆவலுடன்
எதிர்பார்த்து காத்திருக்கும் என்
நண்பர்களுக்கு என் இனிய வணக்கம்.

அனைவரையும் நேரில் அழைக்க ஆசை.

ஆனால்,

நேரம் என் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத காரணத்தால்
பலரின் நண்பராக இருக்கும இந்த கணினியின்
உதவியுடன் உங்களைச் சந்திக்கிறேன்.

இதை நேரடி அழைப்பாக நினைத்து
நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வந்து
என் திருமணத்தையும் (செப்டம்பர் 11) வரவேற்பையும் (செப்டம்பர் 12)
சிறப்பிக்க வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
உங்கள் வரவையும், நட்பையும் என்றும் விரும்பும்

நிவேதிதா....





10 June 2008

தென்னக ரயில்வே - சிறப்பு ரயில்

தென்னக ரயில்வே நிறைய சேவைகளை அறிவித்தாலும், பல இன்னல்களையும் கூடவே தருகிறது. இரயில் நிலையங்களில் இரயில்களின் வருகைப் பற்றி அறிவிப்பார்கள் அல்லாவா.. அதைக் கூட அதிகம் அக்கறை எடுக்காமல் தகவலை சரியாகத் தெரிந்துக் கொள்ளாமல் தப்பும் தவறுமாக அறிவிக்கிறார்கள். இரயில் இந்த பிளாட்பாரத்தில் வரும் என்று சொல்விட்டு மாற்றுவது. இதாவது சிறப்பு ரயில் என்பதால் சகித்துக் கொள்ளலாம். ஆனால் வராத ஒரு இரயில் வந்து விட்டதாகத் திரும்பத் திரும்ப அறிவித்து மக்களைக் குழப்பி அவர்களை அலைக்கழிப்பது என்பது தண்டிக்கத் தக்க, வருந்த தக்க ஒன்று. முதியோர், உடல் ஊனமுற்றோர், குழந்தைகள் என வரும் இம்மாதிரி இடங்களில் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துக் கொள்வது கண்டிக்கப் பட வேண்டிய ஒன்று. சம்பந்தப் பட்டவர்கள் யோசிப்பார்களா??

மேலும் சிறப்பு ரயில் என்று விடுகிறார்கள். அதில் சிறப்பு என்னவென்றால் நாம் எப்படியும் ஊர் போய் சேர்ந்து விடுவோம் என்பது மட்டுமே.. எப்பொழுது வரும். தெரியாது. வர வேண்டிய நேரத்தில் இருந்து 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் வரலாம். சரி எப்பொழுது போய் சேரும்.. சேர வேண்டிய நேரத்திற்கு 3 அல்லது 4 மணி நேரத்திற்குள் சேரலாம். எதிரே வரும் அனைத்து இரயிலையும் வரவேற்று வழியனுப்பி.. இதை நம்பி நாம் எப்படி அலுவலகம் போவது. எத்தனைப் பேர் எத்தனை அவசர வேலையை வைத்துக் கொண்டு இரயில் ஏறி இருப்பார்கள். எத்தனைப் பேர் அலுவலகம் செல்ல வேண்டியிருக்கும். அத்தனையும் இவர்களின் திட்டமின்மையால் வீணாகி விடுகிறது. மக்கள் அல்லல் படுவதும் அவதிப்படுவதும் தான் மிச்சம்.

ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி இரவு 8:30 க்கு கிளம்பி, காலை 4:15 க்கு சென்னை வந்து சேர வேண்டியது, எல்லா இரயிலுக்கும் வழி விட்டு காலை 10:30 க்கு சென்னையை அடைந்து, அங்கிருந்து நான் என் இருப்பிடம் வந்து அடைந்தப் போது மணி மதியம் 12:45.. அதற்குப் பின் நான் தயாராகி எங்கே அலுவலகம் போவது. ஒரு நாள் தேவையே இல்லாமல் ஒரு விடுமுறை வீணானது மட்டும் இல்லாமல், எத்தனை அசவ்ரியங்களை எதிர் கொள்ள வேண்டியதாகி விட்டது. இரயில்வே நிர்வாகம் கொஞ்சம் யோசித்தால் நன்றாக இருக்கும். யோசிப்பார்களா???

03 June 2008

கடிகாரம்

என் கட்டுப்பாட்டிற்க்குள் இருக்க வேண்டியவன் நீ
என் கட்டுப்பாட்டை மீற என்ன தைரியம் உனக்கு!

உன்னை நினைக்கையில்

உன்னை நினைக்கையில் எனக்கு
கவிதை கூட வருகிறது
உன்னை நினைக்கையில் எனக்கு
கத்திரி வெயில் கூட குளிர்கிறது
உன்னை நினைக்கையில் எனக்கு
வாழக் கூட பிடிக்கிறது
உன்னை நினைக்கையில் எனக்கு
சாதிக்கக் கூட தோன்றுகிறது
உன்னை நினைக்கையில் எனக்கு
எல்லாமே பிடிக்கிறது
ஆனால் உனக்கோ
என்னை நினைக்கையில் எரிச்சல் மட்டுமே வருகிறது

என்னக் கொடுமை சார் இது!!!

லைசன்ஸ் வாங்கியாச்சா??

ஒரு வழியா நானும் கார் ஓட்டக் கத்துக்கிட்டு லைசன்ஸ் வாங்கியாச்சு!!

முன்னல்லாம் LLR வாங்க RTO ஆபிஸ் போனா ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்துபவர்களோ இல்லை மற்றவரிடமோ கேட்டு LLR தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை அளிப்பார்கள்.. ஆனால் இப்போது அது எல்லாம் முடியாது. தற்போது LLRக்கு ஆன்லைன் தேர்வு முறை வந்து விட்டது. அதாவது LLR வாங்கும் நபர் தானே கணிணியின் முன் அமர்ந்து அவருக்குக் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். முன்னே எழுதியவரிடம் எல்லாம் கேட்க முடியாது. ஆமாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேள்வி அல்லவா இருக்கும். அதனால் கேட்டு எல்லாம் எழுத முடியாது.சாலை விதிகள் தெரிந்திருந்தால் மட்டுமே LLR. அதுவும் 10 கேள்விகளில் 8 கேள்விக்காவது சரியாக விடை அளித்திருக்க வேண்டும்.இந்த முறையை நான் வரவேற்கிறேன். ஆமாம் மக்கள் இதற்காகவாவது சாலை விதிகளை அறிந்துக் கொள்வார்களே!! நானும் இரு சக்கர வாகனத்திற்கு லைசன்ஸ் வாங்க வேண்டும். அதனால் தான் சாலை விதிகளைத் தேடித் தேடிப் படித்துக் கொண்டுருக்கிறேன்.

இந்த இரு சக்கர வாகனங்களுக்கு 8 போடச் சொல்வது போல் நான்கு சக்கர வாகனத்திற்கு 'H' போட சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும். கேரளாவில் உள்ள இந்த முறையைத் தமிழ் நாட்டிலும் பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும். முறைக்காதீர்கள் 'H' போடுவது கஷ்டம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இப்பொழுது தேர்வு எப்படி நடக்கிறது தெரியுமா?

தேர்வு நடப்பது பீச் ரோட்டில். நல்ல நீளமான ரோடு. ஒரு தடவைக்கு 4 நபர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். இதில் நீங்கள் முதல் மூன்று பேரில் நீங்கள் ஒருவராக இருந்தால் கவலையே இல்லை உங்களுக்கு. ஆமாம் நீங்கள் வண்டியை முதல் கியரில் கிளப்பி, 2, 3, 4 என மாற்றி ஓட்டிக் காண்பித்தாலே போதும். லைசன்ஸ் உறுதி. ஆனால் இந்த நான்காம் நபரின் நிலமை தான் கொஞ்சம் கஷ்டம்.

ஆமாம் மூன்று பேர் ஆளுக்கு 3 அல்லது 4 நிமிடம் ஓட்டி இருந்தாலும் வண்டி ஒரு கட்டத்தில் திருப்பும் கட்டாயத்திற்கு வந்து விடும் அல்லவா? அதனால் மாட்டப் போவது அந்த நான்காவது நபராகத் தானே இருக்கும். கிளட்சு, பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி, முதல் கியர் போட்டு, ஸ்டியரிங்கை வலப் பக்கம் திருப்பி, கிளட்சிலேயே வண்டியை சிறுது தூரம் நகர்த்தி, பின் ரிவர்ஸ் கியர் போட்டு அப்பா சாமி எழுதுறப்போவே கண்ணக்கட்டுதே......

இதை வைத்து அவர்கள் எப்படித்தான் முடிவு செய்கிறார்களோ, தெரியவில்லை. அந்த மூன்று பேருக்கும் இதில் தகராறு இருக்கும் பட்சத்தில் நிலமை என்னாகும்?? சரி இப்ப என்ன ஆச்சு?? ஏன் இப்படி புலம்புகிறேன்னு கேட்பது காதில் விழுகிறது. அந்த நான்காம் நபர் நான் தான். :)

போராட்டமே வாழ்கையாகி விட்டது. எதுவும் எனக்கு போராடாமல் கிடைத்ததில்லை. ஆனாலும் இந்த போராட்டம் எனக்குப் பிடித்திருக்கிறது.

கஷ்டப் படாமல் கிடைப்பது என்றும் நிலைக்காது.
கஷ்டப்பட்டு அடைவது என்றும் நம்மை விட்டுப் போகாது அல்லவா..

விடாமல் முயன்றுக் கொண்டேயிருங்கள் நிச்சயம் ஒரு நாள் வெற்றிக் கிட்டும்...

01 June 2008

உறவு மேம்பட.....

1. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற எண்ணத்தை , அகந்தையை விட வேண்டும் (Ego)
2. தேவை இல்லாதவற்றை பேசுவதை நிறுத்த வேண்டும் (Loose Talk)
3. பிரச்சனைகளை எளிமையாக கையாள வேண்டும் (Diplomacy), விட்டுக் கொடுத்து பழக வேண்டும் (Compromise)
4. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆக வேண்டும் (Tolerance)
5. நேரம் காலம் அறியாமல் எல்லோரிடமும், தேவையோ, தேவை இல்லையோ சில விஷயங்களைச் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள்.
6. பிடிவாதத்தை விட்டு விடுங்கள் (Flexibility)
7. மற்றவர்களுக்கு மரியாதைக் காட்டவும், இனிமையாக பேசவும் மறக்காதீர்கள் (Courtesy)
8. மற்றவர்களை பார்க்கும் போது புன்னகைக்கவும், பேசவும் கூட நேரம் இல்லாதது போல் நடிக்காதீர்கள்.
9. பிரச்சனையின் போது மற்றவர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணாமல், நீங்களே முதலில் விட்டுக் கொடுத்து விடுங்கள்.


- போனால் போகட்டும்...............
கொண்டாடுவோம்............... நூலில்....

ஓஷோவின் அனுபவங்களிலிருந்து சில....

முயன்று தான் பாருங்களேன்!!

17 May 2008

சபாஷ் பிறந்தக் கதை!!

கி.பி. 1587ல் பாரசீகத்தை ஆண்ட மன்னர் ஷா அப்பாஸ். இவர் ஆட்சியின் போது துருக்கியும் உஸ்பெக்கும் பாரசீகத்தை தாக்கியது. மிகுந்த மன உறுதுயுடன் போராடி வெற்றியும் பெற்றார் ஷா அப்பாஸ். இப்படி தான் பாரசீக சாம்ராஜ்யம் உருவானது. இவர் தான் இஸ்பஹான் நகரை பாரசீகத் தலைநகராக்கியவர். மொகலாயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில், காபூல் மற்றும் கந்தஹாரை மிகவும் எச்சரிக்கையாகப் பாதுகாத்து வந்தார்கள். காரணம், வெளி நாட்டார் இந்தியா மீது படையெடுத்து வந்தால் இந்த இரு பிரதேசங்களின் வழியே தான் வரவேண்டும் என்பதால் தான் இந்த பாதுகாப்பு.

1607 மார்ச்சில் ஷா அப்பாஸ் இந்தியா மீது படையெடுத்தார். கந்தஹாரில் அவர் படை முகாமிட்டது. அப்போது அங்கு ஜஹாங்கீர் ஆட்சி இருந்தது. ஜஹாங்கீரின் சேனாதிபதி தன் திறமையால் ஷா அப்பாஸின் படைகளை விரட்டியடித்தார். இதையறிந்த ஷா அப்பாஸ், ஜஹாங்கீருக்கு ஓர் ஓலை அனுப்பினார்.

தன் படைகள் ஜஹாங்கீர் மீது படையெடுத்ததை தாம் ஒப்புக் கொள்ளவில்லை என்றும், தமக்குத் தெரியாமல் இது நடந்துவிட்டதாகவும், ஜஹாங்கீருடன் நட்புக் கொள்ளவே தாம் விரும்புவதாகவும், இரண்டு முஸ்லிம் அரசுகளும் சிநேகமுடன் இருப்பதே நல்லது என்றும் சொல்லி ஓலை அனுப்பினாராம்.

இதைக் கேட்ட ஜஹாங்கீர் 'இது ஷா அப்பாஸ் வேலை' என்று சொல்லி மகிழ்ந்தாராம்.

அதாவது தோல்வியைத் தன் சமார்த்தியத்தால் வெற்றியாக மாற்றியவர் ஷா அப்பாஸ். அதன் பிறகு இதைப் போன்ற செயல்களை யார் செய்தாலும் 'ஷ பாஸ்' சொல்வது வழக்கமாகி விட்டது. ' ஷா அப்பாஸ்' என்பது 'ஷபாஸ்' என்று உருதுவில் மாறி, பிறகு 'சபாஷ்' என்று தமிழில் மாறியதாகச் சொல்கிறார்கள்.

அட இது நிஜந்தானா என்று எல்லாம் கேட்கப்படாது. சுவாரஸ்யமாக இருந்தது, அதனால் உங்களிடம் பகிர்ந்துக் கொண்டேன் அம்புட்டுத் தான்.. வரட்டா??

பத்து மாதக் குழந்தை

சென்னைக்கு நான் பத்து மாதக் குழந்தை. என்ன இதற்கு முன் சென்னைக்கு நீ வந்ததே இல்லையா? என்று கேட்காதீர்கள். அதை நான் கர்பகாலம் என்று தான் சொல்வேன்.(4+6) என கல்லூரி நாட்களிலும், கல்லூரி முடிந்து வேலைத் தேடும் போது என்று பத்து மாதம் இருந்திருப்பேன் கர்பத்தில் உள்ள குழந்தை வயிற்றுனுள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதைப் போல நானும் என் சித்தப்பா வீட்டிலும், என் மாமா வீட்டிலும் கொஞ்சம் கொஞ்சம் உறவுகள் பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டேன். உறவுகளிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும். எப்படி நடந்தால் அவர்களுக்கு நல்லவளாக இருப்பேன் என்று கொஞ்சம் கொஞ்சமாக நன்றாகவே கற்றுக் கொண்டேன்.அப்போது நான் கூட்டுப் பறவை. நிறைய கட்டுப்பாடுகள். உடைக்கவும் முடியாது. அதில் சிக்கித் தவிக்கவும் மனம் வராது.

ஆனால் இன்று நான் சுதந்திரப் பறவை. என்னைக் கேட்க யாருமில்லை என்றாலும் நான் வரம்பு மீற நினைத்ததில்லை.ஹாஸ்டல் வாழ்க்கை. வொவ்வொரு மொழி பேசும் பெண்கள். வித்தியாசமான சூழ்நிலை.

நினைத்ததை சுதந்திரமாக இன்று செய்ய முடிகிறது. கார் ஒட்டக் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆசைப் பட்டேன். அதற்கும் சேர்ந்தாகி விட்டது. இந்த மாத இறுதிக்குள் நிரந்தர உரிம்மும் வாங்கி விடுவேன். நிறைய புத்தகங்கள் படிக்க ஆசை. அதையும் ஆரம்பித்து விட்டேன். ஓவியம் வரையும் எண்ணம் மட்டும் நிறைவேறாமல் இருக்கிறது. ஐ.டி யில் ஐக்கியம் ஆகிவிட்டேன் அல்லவா, அலுவலக நாட்களில் சுத்தமாக நேரம் கிடைக்க மாட்டேங்கிறது. வார இறுதியில் துணி துவைக்கவும், அலமாரியை சீர்படுத்தவும், தேவையானவற்றை வெளியேச் சென்று வாங்கவுமே நேரம் சரியாக உள்ளது.

ஆனாலும் எனக்கு இந்த வாழ்க்கைப் பிடித்திருக்கிறது. என்னாலும் பிறருக்கு உதவ முடிகிறது என்பதாலும், என் அப்பா, அம்மா, தங்கை எல்லோருக்கும் அவர்கள் ஆசைப்படுவதை எல்லாம் வாங்கிக் கொடுக்க முடிகிறது என்பதாலும் எனக்கு இந்த வாழ்க்கைப் பிடித்திருக்கிறது. ஆனால் வீட்டுச் சாப்பாடு மட்டும் எனக்குக் கிடைக்கவே மாட்டேங்கிறது. இந்த ஒன்றைத் தவிர நான் பத்து மாதக் குழந்தையாக நிறைய புதுபுதுப் அனுபவங்களைப் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

சரி சரி இப்படியே வெட்டிக் கதை பேசிக்கிட்டு இருந்தா வேலையை யார் பார்ப்பது.. என்னபா ரைட்டா?? ஒக்கே அதனால இப்பால ஜீட் விட்டுக்கினு அப்பால வரேன்....

16 May 2008

நோ கவலை ப்ளிஸ்!!

இன்று நம்மில் பலர் நிறைய படித்து, புத்திசாலியாகத் திகழ்கிறார்கள். அப்படிப் பட்டவர்கள் கவலையில் சிக்கித் தவித்தால், அவர்கள் படித்த படிப்பிற்கோ, அவர்களுடைய அறிவிற்கோ எந்தவித பிரயோஜனமும் இல்லை.

வாழ்க்கையில் முன்னேறிய பலருடைய வாழ்க்கையைத் திருப்பிப் பார்த்தால் நமக்கு ஒன்றுத் தெரியும். அவர்கள் தேவையற்ற விஷயங்களுக்கு எல்லாம் கவலைப்பட்டுருக்க மாட்டார்கள் என்று.

கவலை என்பது ஒரு அரக்கனைப் போன்றது. அது நம் மனதுள் புகுந்து விட்டால் பல நல்ல சிந்தனைகள் நம் மனதை விட்டுப் போய் விடும். நல்ல சிந்தனை என்பது தவம் போன்றது. நம் எண்ண அலைகள் பலவிதமாக மாறி இறுதுயில் ஒரு புதிய பரிமணத்தை அடைவது என்ப்து தவத்திற்கு பின் கிடைக்கும் வரம் போன்றது.

நாம் கவலையுடன் இருந்தால் நல்ல சிந்தனை மட்டும்மல்ல, சுய நினைவும், கல்வியால் நாம் பெற்ற அறிவும் கூட வராமல் போய் விடும். நம் லட்சியம் மற்றும் சுயமுயற்சியால் நாம் அடைய வேண்டிய முன்னேற்றத்தை கவலையால் அடையாமலே போய் விடலாம்.

கவலைகள் பலவிதம். அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். நான் ஏதோ கவலையில் இருந்த போது என் நண்பர் எனக்கு கூறிய அறிவுரை இது.

' உனக்காவது உன் கவலை என்னவென்றாவது தெரிந்திருக்கிறது. அதனால் எளிதில் வெளியே வந்து விடலாம்.

ஆனால் நிறைய பேருக்கு அவரகள் எதற்காக கவலைப் படுகிறோம் என்றே தெரியாமல் இருக்கிறார்கள்.

அவர்களை நினைத்துப் பார்த்தாலே உன் கவலை எல்லாம் உனக்கு பெரிதாகத் தெரியாது' என்று...

என்ன என் நண்பரின் கருத்து சரிதானே?

நம் மனம் கவலையைப் போட்டு வைக்கும் குப்பைத் தொட்டிக் கிடையாது.

சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதற்கு ஏது பலம்

அதனால் தான் சொல்கிறேன். எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள் என்று..
இது எனக்கும் கூட நன்றாகவே பொருந்தும்.

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!!

- பாரதியார்

04 May 2008

கோபமும் வீரமும் வேறு படுவது எங்கே?

விகடன் பிரசுரத்தில் வெளிவந்துள்ள செங்கோட்டை ஸ்ரீராம் எழுதிய 'மறந்து போன பக்கங்கள்' நூலைப் படித்தேன்..

ஒவ்வொரு விஷயத்தையும் நம் அனுபவத்தால் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு நம் வாழ்நாள் முழுதும் கூட போதாமல் போகலாம். ஆனால் அதையே அனுபவம் பெற்ற பல பெரியவர்களிடமிருந்து பெற்றால் குறைந்த காலத்தில் நிறைய அனுபவங்களைத் தெரிந்துக் கொள்ளலாம். ஆனால் கையைச் சுடும் என்றாலும் தீயைத் தொட்டுப் பார்த்து ஆமாம் 'சரி தான், சுடுகிறது என்று சொல்லும் ஆசாமிகள் ஆயிற்றே நாம்!!

இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் மிக எளிதில் கோப்ப்படக்கூடிய பெண் நான். கோபத்தில் என்ன சொல்கிறேன், என்ன செய்கிறேன் என்று தெரியாமல் எதையாவது செய்து விட்டு பின் வருத்தப்படுவேன். பெற்றோரும், நண்பர்களும் சொல்லி இப்போது கோபத்தை கட்டுப்படுத்தக் கற்றுக் கொண்டுருக்கிறேன். நான் கோபத்தில் எதையாவது சொல்லிவிட்டு 5 அல்லது 10 கழித்து நான் யோசிக்க ஆரம்பிக்கும் பொழுது தான் என் தவறு எனக்கு உறைக்கும். உடனே சம்பந்தபட்டவர்களிடம் 'சாரி கேட்டுக் கெஞ்சி அவர்களை சமாதனப்படுத்திவிடுவேன். அவர்கள் அப்போது சமதானம் ஆனாலும் அவரகள் மனதில் அந்த வடு இருக்கத் தானே செய்யும். இந்தக் கட்டுரையை படிக்கும் போது தான் என் மரமண்டையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.

சுவாமி விவேகனந்தரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் சிஷ்யையின் பெயரை எனக்கு வைத்ததால், அவர் எனக்குச் சிறு வயதிலேயே அவர் அறிமுகம் ஆகிவிட்டார். பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டியில் அவரைப் பற்றி பேசி பல முதல் பரிசிகளைப் பெற்று இருக்கிறேன்.

அவர் கோபத்தைப் பற்றி சொல்லும் போது 'பலமே வாழ்வு, பலவீனமே மரணம்' என்று ஒரே வாக்கியத்தில் சொல்லிவிட்டார். அதாவது வீரம் நெஞ்சில் இருக்கும் போது தானே வெளித்தெரிகிறது. அந்த வீரம் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும். கொடியவர்களை வீழ்த்தவும், நல்லவர்களுக்கு உதவுவதாகவும் இருக்க வேண்டும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய தமிழ்ப் பட ஹீரோக்களின் கோபம் போன்று இருக்க வேண்டும்.

நம் வாழ்க்கையில் 10 சதவீதம் நமக்கு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்தது. மீதி 90 சதவீதம் நாம் அந்த நேரத்தில் எப்படி நடந்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது.

உதாரணத்திற்கு, காலையில் அம்மாவோ, தங்கையோ, மனைவியோ தேநீர் கொண்டு வரும் பொழுது கைத் தவறி சட்டையில் கொட்டி விடுகிறது. இது என்ன அவர்கள் வேண்டும் என்றா செய்தார்கள். தெரியாமல் நடந்து விட்டது. இதை நாம் இரண்டு முறைகளில் கையாளலாம். ஒன்று, கொட்டியவரைத் திட்டுவது. மற்றொன்று 'பரவாயில்லை, தெரியாமல் தானே கொட்டி விட்டது' என்று சொல்லி வேறு சட்டையை மாற்றிக் கொள்ளவது.

இதில் முதல் ஒன்று, அன்றையப் பொழுதை நீங்களாகவே கெட்டப் பொழுதாக்கிக் கொள்ளவதாகி விடும். மற்றொன்று அன்றைய பொழுது இன்னும் நல்ல பொழுதாகி அவரகள் அன்பு கூடவும் வாய்ப்பளிக்கும்.. இதில் எது நல்லது என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

வாரியார் சுவாமிகளும் கோபத்தைப் பற்றி இப்படிக் கூறியிருக்கிறார்.

'சூடான பால் ஆற வேண்டும் என்றால் அதை வேறு பாத்திரத்தில் மாற்றி ஆற்ற வேண்டும்'. அதுப் போல சூடான சூழ்நிலையில் உங்கள் மனம் சலனமுற்றால் அந்த இடத்தை விட்டு அகன்று விட வேண்டும்.

சரி, இது நம்மை பிறர் கோபப்படுத்தும் போது செய்ய வேண்டியது. ஆனால் நாமும் பிறரைக் கோபப்படுத்துவது போல் ஆகிவிடுகிறதே அப்பொழுது என்ன செய்யவது? அதற்கும் ஒரு வழி சொல்கிறார்.

உலகில் மிக நல்லவன் என்றும், மிகக் கொட்டவன் என்றும் யாரும் இலர். அனைவருக்கும் இரண்டும் கலந்தே இருக்கும். இரண்டையும் தெரிந்துக் கொண்டு ஒருவனின் குற்றங்களை வாய் விட்டு சொல்லாமலும், குணங்களை பாராட்டவும் செய்தால் மற்றவரைக் கோபப்படுத்துவதில் இருந்தும் நாம் தப்பித்து விடலாம்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

இது வள்ளுவன் குறள்.

பின் வருவது இந்த நூல் ஆசிரியரின் குரல்.

இனத்தை சுகத்தை இனிதாய் விரும்பின்
சினத்தை அடக்கல் சிறப்பு.

என் நண்பர் இதற்காக எனக்குச் சொன்ன அறிவரை,

நான்கு அறிவாளிகள் மத்தியில் நாம் ஒரு அறிவாளியாக நடந்துக் கொள்வது,
நான்கு பைத்தியங்களுக்கு மத்தியில் நாம் ஒரு பைத்தியமாக நடந்துக் கொள்வது,

இப்படிச் செய்தால் பிரச்சனை வராதே!!
பிரச்சனை இல்லாவிட்டால், அங்கே கோபத்திற்கு என்ன வேலை???

என்ன சரி தானே??

15 April 2008

நேதாஜி மேர்ஸ்ஸீ ஹோம்

பள்ளி, கல்லூரி நாட்களில் விஷேச தினங்களில் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்தோ அல்லது தூங்கியோ பொழுதைக் கழிப்பதுண்டு. அப்போது எல்லாம் உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என்று தோன்றும். ஆனால் என்ன செய்வது, யாரிடம் கேட்பது என்று எதுவும் தெரியாது. வீட்டுக்குள்ளே ஒரு கிணற்றுத் தவளைப் போல வாழ்ந்துக் கொண்டிருந்த காலம் அது. வெளி உலகம் அவ்வளவாக பரிட்சியம் இல்லாத நேரம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை, ஒவ்வொரு விதமான பழக்க வழக்கங்கள் என்று எதையும் யோசித்துக் கூட பார்க்கத் தெரியாத ஒரு சாதாரண பெண் நான்!!

நினைத்தது நினைத்து முடிக்கும் முன்னரே எனக்குக் கிடைத்து விடும். ஆனால் இந்த ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கோ நினைக்கவே தெரியவில்லை. அப்படியே நினைத்தாலும் அது தானகவே மறக்கும் வரை கிடைப்பதும் இல்லை. ஒவ்வொரு பிஞ்சுக்களின் பின்னாலும் எத்தனை எத்தனை சோகக் கதைகள். போதைக்கு அடிமையான பெற்றோர், எய்ட்ஸ் வந்த பெற்றோர். இன்னும் கொடுமையாக இவர் தான் தாய், தந்தை என்றே தெரியாத பிஞ்சுக் குழந்தைகள்!!

அப்படிப் பட்டக் குழந்தைகள் உள்ள ஒரு இல்லம் தான் நேதாஜி மேர்ஸு ஹோம். இந்தக் குழந்தைகளுக்கு தமிழ் புத்தாண்டு அன்று மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அவர்களுக்கு அசைவம் தான் பிடிக்கும் என்பதால் நல்ல நாளாக இருந்தாலும் பரவாயில்லை என்று அதற்கே ஏற்பாடு செய்து விட்டோம்.

மதிய உணவுக்கு வரிசையாக அமர்ந்து இருந்தார்கள். 2 1/2 வயது முதல் 15 வயது வரை மொத்தம் 26 குழந்தைகள். ஒவ்வொருவரிடமும் அவர்கள் பெயரைக் கேட்டுக் கொண்டுருந்தேன். அதில் ஒரு சிறுவன் எனக்கு 'டோலு, டோலு' பாடத் தெரியும் என்று பாடியும் காட்டினான். அவன் அருகில் இன்னொருக்குட்டி என்னையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் என்னிடம் பேச மாட்டானாம். அவனுக்கு அடிப்பட்டு இருப்பதாகவும், அவன் பெயர் 'சூரியா' என்று குழந்தைகளுக்கே உரிய தோணியில் அட்டகாச அறிமுகம் செய்து வைத்தான் நம் 'டோலு, டோலு' சுட்டி. என்னையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்த சூரியா, அடிப்பட்ட கையைக் காட்டி 'வலிக்குது' என்று மட்டும் சொன்னான். உண்மையில் எனக்கு மிகவும் கஷ்டமாகி விட்டது. எனக்கு சின்னதாக காயம் பட்டாலே அழுது ஆர்பாட்டம் செய்து என் பெற்றோரை ஒரு வழி ஆக்கி விடுவேன். பெற்றோரே இல்லாத இவர்கள் தனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் கூட எப்படி சொல்வது, சொன்னால் திட்டு விழுமோ என்று பயந்து பொறுத்துக் கொள்கிறார்களே உண்மையிலேயே நான் இவர்களிடம கற்க நிறைய இருக்கிறது.

அந்த பிஞ்சுக்குழந்தைகள் யார் உதவியும் இன்றி தாமாகவே மிகவும் அழகாக சாப்பிட்டார்கள். இந்த வயதிலும் எனக்கு மீன் சாப்பிடத் தெரியாது. ஒரே ஒரு முள் இருந்தால் மட்டுமே சாப்பிடுவேன். ஆனால் அந்த குழந்தைகள் எவ்வளவு அழகாக சாப்பிட்டார்கள் தெரியுமா? அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து என் தம்பி 'எப்ப நீத்து நீங்க இப்படி சாப்பிடுவீங்கன்னு' கிண்டல் வேறு.

இந்த இல்லத்தின் குட்டி மற்றும் செல்லப் பெண் 'சிந்து'. மிகவும் அழகாக நடனம் ஆடிகிறாள். யாரிடமும் கற்காமல் அவளாகவே ஆடுகிறாளாம். அசத்தல் தான் போங்க!!

விடைபொறும் பொழுது எனக்கு சூரியாவை எப்படியாவது பேச வைத்து விட வேண்டும் என்று என்னனவொ செய்தேன். என்ன் வேணும் உனக்கு என்று நான் கேட்டவுடன் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு அவன் சொன்ன வார்த்தை 'அம்மா'.. என்ன பதில் சொல்ல நான்???? அவன் கேட்ட இன்னொன்று 'மிட்டாய்'. அதையும் என்னால் வாங்கிக் கொடுக்க முடியாமல் போய் விட்டது...

இப்படி ஒரு நெகிழ்ச்சியான அனுபவம் கிடைக்க உதவிய கார்த்திக் குமாருக்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.. நன்றி கார்த்திக்!!



வலது ஒரத்தில் நம் டோலு, டோலு.அவன் வலது பக்கத்தில் நில நிறச் சட்டையில் 'சூரியா






ரோஸ் நிற உடையில் நம்மைப் பார்க்கும் 'சிந்து'

31 March 2008

கண்ணாடி உறவுகள்!!

உறவுகளை கண்ணாடியுடன் ஒப்புடுவார்கள்!!
அது நம்மை பிரிதிபலிப்பதால் மட்டும் அல்ல!!
எளிதில் உடையக்குடியதும் என்பதால்!!

உறவுகள் பல வகை இருந்தாலும்
உணர்வுகள் பல நேரங்களில்,
பல விஷயங்களில் ஒன்றாகவே இருக்கிறது!!

எந்த ஒரு உறவையுமே
எவர் ஒருவரின் வற்புருத்தலின் போரிலும்
நம்முள் திணிக்க முடியாது!!

அவர் அவர் குணங்களை
அப்படியே ஏற்றுக் கொள்ளும்
மனம் இருந்தால்
அந்த உறவு நம்மை பிரிதிபலிப்பதாக இருக்கும்..

இல்லை என்றால்,
கண்ணாடியின் இரண்டாம் நிலை தான்..
ஆம் உறவு உடைந்து கூட போகலாம்!!

13 February 2008

என்னைப் புரியாதா!!!

உன்னைப் பார்க்கும் பொழுது
மனம் கொட்டிவிடு என்கிறது!!
வாயோ வார்த்தைக் கிடைக்காமல் தவிக்கிறது!

மனமும் வார்த்தையும் சேரும் நேரம்
கண்கள் உன்னைக் காண முடியாமல் தவிக்கிறது!!

என்னடா செய்வேன் நான்
என்றடா புரியும் என் மனம்!!

உன்னைக் காதலிக்க காரணம் கேட்கிறாய்
என்ன காரணம் நான் சொல்ல
நீ நல்லவன்,
என்னைப் படிப்பவன்,
இது போதாதா,
உன்னை நான் காதலிக்க...

உன்னை நான் மறக்க
நீ நடத்தும் இந்த நாடகமும் புரிகிறது!!

மறக்கவும் முடியாமல்,
மறைக்கவும் முடியாமல்
தவிக்கும் என் மனம்
நீ அறிய
நான் என்னடா செய்ய!!

காத்திருப்பேன்
என் ஆயுள் வரை காத்திருப்பேன்
உன்னை சுமக்க முடியாவிட்டாலும்
உன் நினைவுகளை,
என் உயிர் உள்ள வரை சுமக்க நினைக்கும்
என்னைப் புரியாதா!!!