பி3ல்லி பாடக் கற்றுக் கொண்டது எப்படித் தெரியுமா?
வாட்ஸ் ஆப் குரூப்பில் சின்ன குழந்தைகளுக்கு பிறந்த நாள் வந்தால் வாழ்த்துக் கூற இணையத்தில் இருந்து காக்டெயில்கள் ஹாப்பி பேர்த்டே பாடுவதை டவுன்லோடு செய்து அனுப்புவதுண்டு. அதைப் பார்த்து நம் பி3ல்லியின் குரலில் நாங்கள் எப்பொழுது கேட்கப் போகிறோம் என்று சிலர் கேட்க ஆரம்பிக்கவும் நாம் ஏன் இந்த விடியோவை வைத்து பி3ல்லிக்கு பாடக் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று தோன்றியது. ஆனால் அது சாத்தியமா? என்று அப்போது தெரியவில்லை.
தினமும் மாலை வீடு வந்தவுடன் அவர்களைக் கொஞ்சி விட்டு பின் விடியோவை ஆன் செய்வேன். முதலில் இருவரும் பாடலைக் கேட்கவில்லை. தங்களைப் போல் ஒன்றைப் பார்த்தவுடன் இருவரும் சந்தோஷத்தில் பறப்பதும், சத்தமாக விசில் அடிப்பதுமாக இருந்தார்கள். ஒரு வாரம் இப்படியே போனது. நானும் விடாமல் தினமும் அதை முதலில் 10 நிமிடம், பின் 15 நிமிடம் என கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கினேன். முதல் வாரம் கத்திக் கொண்டே இருந்த பி3ல்லி இப்பொழுது பாட்டைக் கவனிக்கத் தொடங்குவதாகப் பட்டது. நான் 15 நிமிடம் தொடர்ந்து பாட வைத்து மொபைலை எடுக்கப் போனால் பி3ல்லிக்கு கோபம் வரும். மொபைலை பிடுங்க வருவான். மொபைலை எடுக்கப் போய் கடி வாங்கிய அனுபவம் என் கணவருக்கு உண்டு. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அந்த விடியோவை மில்லி பார்ப்பது பி3ல்லிக்குப் பிடிக்காது. உடனே அவளைத் துரத்திவிட்டுத் தான் மறுவேளைப் பார்ப்பான். மில்லிக்கு விடியோவைப் பார்க்க அவ்வளவு ஆசை. என்னிடம் ஓடி வந்து என் மேல் ஏறி பார்க்க ஆரம்பிப்பாள். பி3ல்லிக்கு கோபம் வரும் என்னை முறைத்துக் கொண்டே பாட்டைக் கேட்டுக் கொண்டிருப்பான். இப்படியே மூன்று வாரம் போனது பி3ல்லி பாட்டைக் கேட்டானே ஒழிய அதைப் பாடவில்லை. எனக்கும் பொறுமை போய்விடும் போல் இருந்தது. நான் விடியோவை ஆன் செய்தாலே மில்லி கொட்டாவி விட ஆரம்பித்தாள். பின் தலையைச் சொறிந்து கொள்ள ஆரம்பிப்பாள். ஒரே விடியோ தொடர்ந்து நான்கு வாரமாக போய்க் கொண்டிருந்தது. எனக்கே ஒரு வித அலுப்பு வரத் தொடங்கி போடாமல் விட்டால் பி3ல்லி விட வில்லை. மொபைல் மேல் ஏறி நின்று போடச் சொல்லி என்னைப் பார்ப்பான். போட்டால் அவ்வளவு கவனமாகக் கேட்பான். ஆனால் ஒரு தடவைக் கூட பாடவில்லை.
ஒரு நாள் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து களைத்துப் படுத்து விட்டேன். எங்கிருந்தோ ஹாப்பி பேர்த்டே பாடுவது போல் கேட்கிறது. கனவு போலும். அடிக்கடி கேட்பதன் பக்கவிளைவு என்று நினைத்தேன். ஆனால் வர வர மிக மிக அருகில் கேட்பது போல் இருக்கவே கண்ணைத் திறந்தால் நம் பி3ல்லி!!
என்னால் நம்பவே முடியவில்லை. அவ்வளவு அழகாக என்னைப் பார்த்து பாடிக் கொண்டே இருந்தான். நான் சூப்பர் ர என் செல்லம். என் லட்டு என்று அவனைக் கொஞ்ச ஆரம்பித்து விட்டேன்.
ஹாப்பி பேர்த்டே டு யு வை எப்படி நேரம் பார்த்து பாடுவது என்பது இருவருக்கும் தெரியும். அதை அடுத்து வரும் பதிவுகளில் சொல்கிறேன்.
பி3ல்லி மில்லி உலகத்தில் நாங்கள்!! இன்னும் வரும்!!
1 comment:
வாறே வா ... மிக அருமை
Post a Comment