07 October 2015

வைத்திரி

வைத்திரி (Vythiri). இது முழுவதும் காடுகளால் சூழப்பட்ட ஒரு சிறிய கிராமம். கேரளா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் வயாநாடு(Wayanad)  மாவட்டத்தில் அமைந்துள்ளது.  இங்கு நாம் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் இருந்தாலும் நாம் தங்கும் இடம் (Resort) கூட மிகச் சிறப்பாக இயற்கையோடு கலந்து இருக்கிறது. நாங்கள் தங்கிய ரிசாட் உள்ளேயே ஒரு சிறிய அழகிய நீர் அருவி இருக்கிறது. சென்னையில் தண்ணீருக்கே பஞ்சம். இங்கே எங்கே பார்த்தாலும் தண்ணீரும், அடர்ந்து வளர்ந்த மரங்களும் கண்ணுக்கும், மனதுக்கும் ஒரு விதமான சந்தேஷத்தையும், உற்சாகத்தையும் அளித்தது. சென்னையில் ஒரு வாளி தண்ணிரில் குளித்துவிட்டு இரண்டாவது வாளி எடுக்கலாமா  என்று யோசிக்க வேண்டி இருக்கிறது நாம் வாங்கும் லாரி தண்ணிரால். காரணம் பணம் மட்டும் இல்லை, இரண்டாம் முறை குளித்தால் ஒரு முறைக்கே கொட்டும் மூடி முழுவதும் கொட்டி விடுமோ என்ற பயத்தாலும் தான். கோரளத்துப் பெண்களின் கூந்தலை வர்ணிக்காத கவிஞர்கள் மிகவும் குறைவு. இருக்காத பின்னே காடுகளில்  உள்ள முலிகைகளை எல்லாம் சேர்த்து வரும் சுத்தமான தண்ணீரில் குளித்தால் நன்றாகத் தானே இருக்கும்.  முடி கொட்டி விட்டது என்று சொல்ல முடியாமல் வெட்டிக் கொண்டவர்கள் பலர். என்னையும் சேர்த்து.

அருவிக்கு வருவோம். இந்த ரிச்சாட்டில் இருந்த அருவி எனக்கு நம் ஊர் குற்றால அருவியை நினைவுபடுத்தியது. அங்கே நிறைய கூட்டம் இருக்கும். இங்கே இல்லை. முழுவதும் பாறைகள். நடுவே அருவி நீர். தொட்டாலே நடுங்க வைக்கும் குளிர். மறக்க முடியாத அனுபவம்.

வைத்திரியில் நிறைய அணைகள். குளங்கள், வனவிலங்கு சரணாலயங்கள் என பல சுற்றுலாத் தலங்கள் இருக்கிறது நாம் சுற்றிப் பார்க்க. இங்கே இயற்கைக்கே முதலிடம்.


போகெடு ஏரி (Pookode Lake). இந்த ஏரி, கடல் மட்டத்தில் இருந்து 770 மீட்டர் உயரத்தில் உள்ளது. சுத்தமான இந்த அழகிய ஏரிக்கு நீர் காபினி ஆற்றில் (Kabani River) இருந்து வருகிறது. இங்கு நாம் படகில் சவாரி செய்யும் பொழுது நம் கண்ணில் படும் இயற்கைக் காட்சிகளும், அழகிய பறவைகளும் வர்ணிக்க முடியாத அருமையான காட்சிகள். இந்த ஏரி நாம் பார்ப்பதற்கு நம் இந்தியா நாட்டின் வரைப் படம் போல் இருப்பது ஒரு வித சிலிர்ப்பை உண்டாக்கியது.

இந்தியாவிலேயே மிகப் பெரிய மண் அணை (Earth dam)யாகவும், ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது பெரிய மண் அணை பனசுரா சாகர் அணை(BANASURA SAGAR DAM). மண் அணை என்பது மண், சல்லி. களிமண், பாறைகள் போன்றவற்றைக் கொண்டு அமைப்பது தான் மண் அணை. இந்த அணைக்கு நீர் காபினி நதியின் கிளை நதியான  காரமனதோடு(Karamanathodu ) நதியில் இருந்து வருகிறது. பனசுரா மலையைச் சுற்றி இது அமைப்பட்டு இருப்பதால் இதற்கு இந்த பெயர். படகில் செல்லும் போது நம்மைச் சுற்றி தண்ணீரும் அதைச் சுற்றி மலையும் கண்களுக்கு ஒரு பெரிய விருந்து நிச்சயம். மாலைப் பொழுது நெருங்கும் வேளையில் சாலையை மறைக்கும் மேக மூட்டங்களும், சிறு குழந்தை சினுங்குவதைப் போல் துறும் துறளையும் பார்க்கும் போது நாம் இன்னும் இளமையாகி விடுவோம்.

சோச்சிபாறா அருவி (Soochipara Falls). இது 656 அடி உயர மலையில் இருந்து விழுகிறது. சோச்சி என்றால் ஊசி என்றும் பாறா என்பது பாறையும் குறிக்கிறது. இந்த அருவி கடைசியாக சூழைக்கா ஆற்றில் (Chulika River) சென்று கலக்கிறது. போகும் வழி எல்லாம் பெரிய பெரிய பாறைகளாலேயே பாதை அமைத்திருக்கிறார்கள். மலை உச்சியை நாம் அடைய நடப்பதைத் தவிர வேறு வழி இல்லை. உச்சியை அடைந்தவர்கள் அருவியில் நனைவதை நிறுத்த நிச்சயம் மனம் இல்லாதவர்களாகவே இருப்பர் என்பது மட்டும் உண்மை.  நாங்கள் உச்சி வரை சொல்லா விட்டாலும் உச்சியில் இருப்பவர்களின் மனங்களை, குதுகழிப்பை கீழிருந்த படியே எங்களால் உணர முடிந்தது.

கல்போட்டாவில் இருந்து 25கீ.மீ. தொலைவில் உள்ள ஒரு இடம் தான் இடாக்கல் குகை (Edakkal Caves). இங்கே இரண்டு குகைகள் உள்ளன. ஒன்றை ஒன்று தாங்கிக் கொண்டு. இந்த குகை கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டர் உயரத்தில் இருப்பதாலும், இந்த குகை சில குறிப்பிட்ட அளவு எடையையே தாங்கும் என்பதாலும் குகைக்குள் சொல்வோரின்  எண்ணிக்கை வரையருக்கப் பட்டுள்ளது.  குகைக்கு உள்ளே நம் முன்னோர்கள் வரைந்த மனிதர்கள், விலங்குகள், மரங்கள், பறவைகள்,  சக்கரங்கள, அவர்கள் பயன்படுத்திய போக்குவரத்து வாகனங்கள், எழுத்துக்கள், எண்கள் இன்னும் பல. நம்மை நம் முன்னோர்கள் காலத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார்கள்.  போகும் பாதை மிக மிகக் கடினமே. அடிவாரம் வரை செல்லத் தான் நமக்கு வாகன வசதி உண்டு. பின் நடராஜா சர்வீஸ் தான். கடின பாறைகளீல் ஏறியே செல்ல வேண்டும். முதல் பாதி பாதை நன்றாக இருப்பதால் நடப்பது சிரமமாக இருக்காது. அடுத்தப் பாதி மலை ஏறுவது மட்டுமே ஓரே வழி. நம் முன்னோர்கள் எல்லாம் எப்படித் தான் ஏறினார்களோ சத்தியமாகத் தெரியவில்லை. நாமும் நம் முன்னோர்களை வாழ்ந்த காலத்திற்ககுப் போக வேண்டும் என்றால் ஏறித் தான் ஆக வேண்டும். வரும் பாதை இரும்பு படிக்கட்டுகளால் அமைத்திருப்பதால் இறங்குவது கடினமாக இருக்காது. இங்கே சென்று வர கட்டாயம் ஒரு முழு நாள் தேவை.

வைத்ரியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் நான் மேலே சொன்னது மட்டுமல்லாமல் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் பல இருக்கின்றன. இங்கே உணவு எங்களுக்கு ஒரு பிரச்சனையாக இல்லை.

இங்கு முக்கியத் தொழில் விவசாயம். தேயிலை, காபி, பாக்கு மற்றும் மிளகு இவையே இங்கு முக்கிய விவசாயம். தேயிலைத் தோட்டத்தை நான் மூனார்ரில் பார்த்திருக்கிறேன். காபியைப் பார்த்தது இங்க தான். ஜனவரி முதல் மார்ச் மிளகு அறுவடைக் காலம். அந்த சமயம் இங்கு வந்தால் மிளகைக் குறைந்த விலைக்கு அள்ளிக் கொண்டு போகலாம்.

நேரமும், விடுமுறையும், பணமும் இருந்தால் ஒரு வாரக் காலம் இயற்கையோடு இயற்கையாக இருந்து விட்டு வரலாம்.

No comments: