17 May 2008

சபாஷ் பிறந்தக் கதை!!

கி.பி. 1587ல் பாரசீகத்தை ஆண்ட மன்னர் ஷா அப்பாஸ். இவர் ஆட்சியின் போது துருக்கியும் உஸ்பெக்கும் பாரசீகத்தை தாக்கியது. மிகுந்த மன உறுதுயுடன் போராடி வெற்றியும் பெற்றார் ஷா அப்பாஸ். இப்படி தான் பாரசீக சாம்ராஜ்யம் உருவானது. இவர் தான் இஸ்பஹான் நகரை பாரசீகத் தலைநகராக்கியவர். மொகலாயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில், காபூல் மற்றும் கந்தஹாரை மிகவும் எச்சரிக்கையாகப் பாதுகாத்து வந்தார்கள். காரணம், வெளி நாட்டார் இந்தியா மீது படையெடுத்து வந்தால் இந்த இரு பிரதேசங்களின் வழியே தான் வரவேண்டும் என்பதால் தான் இந்த பாதுகாப்பு.

1607 மார்ச்சில் ஷா அப்பாஸ் இந்தியா மீது படையெடுத்தார். கந்தஹாரில் அவர் படை முகாமிட்டது. அப்போது அங்கு ஜஹாங்கீர் ஆட்சி இருந்தது. ஜஹாங்கீரின் சேனாதிபதி தன் திறமையால் ஷா அப்பாஸின் படைகளை விரட்டியடித்தார். இதையறிந்த ஷா அப்பாஸ், ஜஹாங்கீருக்கு ஓர் ஓலை அனுப்பினார்.

தன் படைகள் ஜஹாங்கீர் மீது படையெடுத்ததை தாம் ஒப்புக் கொள்ளவில்லை என்றும், தமக்குத் தெரியாமல் இது நடந்துவிட்டதாகவும், ஜஹாங்கீருடன் நட்புக் கொள்ளவே தாம் விரும்புவதாகவும், இரண்டு முஸ்லிம் அரசுகளும் சிநேகமுடன் இருப்பதே நல்லது என்றும் சொல்லி ஓலை அனுப்பினாராம்.

இதைக் கேட்ட ஜஹாங்கீர் 'இது ஷா அப்பாஸ் வேலை' என்று சொல்லி மகிழ்ந்தாராம்.

அதாவது தோல்வியைத் தன் சமார்த்தியத்தால் வெற்றியாக மாற்றியவர் ஷா அப்பாஸ். அதன் பிறகு இதைப் போன்ற செயல்களை யார் செய்தாலும் 'ஷ பாஸ்' சொல்வது வழக்கமாகி விட்டது. ' ஷா அப்பாஸ்' என்பது 'ஷபாஸ்' என்று உருதுவில் மாறி, பிறகு 'சபாஷ்' என்று தமிழில் மாறியதாகச் சொல்கிறார்கள்.

அட இது நிஜந்தானா என்று எல்லாம் கேட்கப்படாது. சுவாரஸ்யமாக இருந்தது, அதனால் உங்களிடம் பகிர்ந்துக் கொண்டேன் அம்புட்டுத் தான்.. வரட்டா??

1 comment:

பரிசல்காரன் said...

சபாஷ்! நல்லதொரு தகவல். உண்மையோ பொய்யோ, இத வெச்சு இன்னைக்கு ஒட்டிடுவோம்ல!