04 May 2008

கோபமும் வீரமும் வேறு படுவது எங்கே?

விகடன் பிரசுரத்தில் வெளிவந்துள்ள செங்கோட்டை ஸ்ரீராம் எழுதிய 'மறந்து போன பக்கங்கள்' நூலைப் படித்தேன்..

ஒவ்வொரு விஷயத்தையும் நம் அனுபவத்தால் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு நம் வாழ்நாள் முழுதும் கூட போதாமல் போகலாம். ஆனால் அதையே அனுபவம் பெற்ற பல பெரியவர்களிடமிருந்து பெற்றால் குறைந்த காலத்தில் நிறைய அனுபவங்களைத் தெரிந்துக் கொள்ளலாம். ஆனால் கையைச் சுடும் என்றாலும் தீயைத் தொட்டுப் பார்த்து ஆமாம் 'சரி தான், சுடுகிறது என்று சொல்லும் ஆசாமிகள் ஆயிற்றே நாம்!!

இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் மிக எளிதில் கோப்ப்படக்கூடிய பெண் நான். கோபத்தில் என்ன சொல்கிறேன், என்ன செய்கிறேன் என்று தெரியாமல் எதையாவது செய்து விட்டு பின் வருத்தப்படுவேன். பெற்றோரும், நண்பர்களும் சொல்லி இப்போது கோபத்தை கட்டுப்படுத்தக் கற்றுக் கொண்டுருக்கிறேன். நான் கோபத்தில் எதையாவது சொல்லிவிட்டு 5 அல்லது 10 கழித்து நான் யோசிக்க ஆரம்பிக்கும் பொழுது தான் என் தவறு எனக்கு உறைக்கும். உடனே சம்பந்தபட்டவர்களிடம் 'சாரி கேட்டுக் கெஞ்சி அவர்களை சமாதனப்படுத்திவிடுவேன். அவர்கள் அப்போது சமதானம் ஆனாலும் அவரகள் மனதில் அந்த வடு இருக்கத் தானே செய்யும். இந்தக் கட்டுரையை படிக்கும் போது தான் என் மரமண்டையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.

சுவாமி விவேகனந்தரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் சிஷ்யையின் பெயரை எனக்கு வைத்ததால், அவர் எனக்குச் சிறு வயதிலேயே அவர் அறிமுகம் ஆகிவிட்டார். பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டியில் அவரைப் பற்றி பேசி பல முதல் பரிசிகளைப் பெற்று இருக்கிறேன்.

அவர் கோபத்தைப் பற்றி சொல்லும் போது 'பலமே வாழ்வு, பலவீனமே மரணம்' என்று ஒரே வாக்கியத்தில் சொல்லிவிட்டார். அதாவது வீரம் நெஞ்சில் இருக்கும் போது தானே வெளித்தெரிகிறது. அந்த வீரம் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும். கொடியவர்களை வீழ்த்தவும், நல்லவர்களுக்கு உதவுவதாகவும் இருக்க வேண்டும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய தமிழ்ப் பட ஹீரோக்களின் கோபம் போன்று இருக்க வேண்டும்.

நம் வாழ்க்கையில் 10 சதவீதம் நமக்கு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்தது. மீதி 90 சதவீதம் நாம் அந்த நேரத்தில் எப்படி நடந்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது.

உதாரணத்திற்கு, காலையில் அம்மாவோ, தங்கையோ, மனைவியோ தேநீர் கொண்டு வரும் பொழுது கைத் தவறி சட்டையில் கொட்டி விடுகிறது. இது என்ன அவர்கள் வேண்டும் என்றா செய்தார்கள். தெரியாமல் நடந்து விட்டது. இதை நாம் இரண்டு முறைகளில் கையாளலாம். ஒன்று, கொட்டியவரைத் திட்டுவது. மற்றொன்று 'பரவாயில்லை, தெரியாமல் தானே கொட்டி விட்டது' என்று சொல்லி வேறு சட்டையை மாற்றிக் கொள்ளவது.

இதில் முதல் ஒன்று, அன்றையப் பொழுதை நீங்களாகவே கெட்டப் பொழுதாக்கிக் கொள்ளவதாகி விடும். மற்றொன்று அன்றைய பொழுது இன்னும் நல்ல பொழுதாகி அவரகள் அன்பு கூடவும் வாய்ப்பளிக்கும்.. இதில் எது நல்லது என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

வாரியார் சுவாமிகளும் கோபத்தைப் பற்றி இப்படிக் கூறியிருக்கிறார்.

'சூடான பால் ஆற வேண்டும் என்றால் அதை வேறு பாத்திரத்தில் மாற்றி ஆற்ற வேண்டும்'. அதுப் போல சூடான சூழ்நிலையில் உங்கள் மனம் சலனமுற்றால் அந்த இடத்தை விட்டு அகன்று விட வேண்டும்.

சரி, இது நம்மை பிறர் கோபப்படுத்தும் போது செய்ய வேண்டியது. ஆனால் நாமும் பிறரைக் கோபப்படுத்துவது போல் ஆகிவிடுகிறதே அப்பொழுது என்ன செய்யவது? அதற்கும் ஒரு வழி சொல்கிறார்.

உலகில் மிக நல்லவன் என்றும், மிகக் கொட்டவன் என்றும் யாரும் இலர். அனைவருக்கும் இரண்டும் கலந்தே இருக்கும். இரண்டையும் தெரிந்துக் கொண்டு ஒருவனின் குற்றங்களை வாய் விட்டு சொல்லாமலும், குணங்களை பாராட்டவும் செய்தால் மற்றவரைக் கோபப்படுத்துவதில் இருந்தும் நாம் தப்பித்து விடலாம்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

இது வள்ளுவன் குறள்.

பின் வருவது இந்த நூல் ஆசிரியரின் குரல்.

இனத்தை சுகத்தை இனிதாய் விரும்பின்
சினத்தை அடக்கல் சிறப்பு.

என் நண்பர் இதற்காக எனக்குச் சொன்ன அறிவரை,

நான்கு அறிவாளிகள் மத்தியில் நாம் ஒரு அறிவாளியாக நடந்துக் கொள்வது,
நான்கு பைத்தியங்களுக்கு மத்தியில் நாம் ஒரு பைத்தியமாக நடந்துக் கொள்வது,

இப்படிச் செய்தால் பிரச்சனை வராதே!!
பிரச்சனை இல்லாவிட்டால், அங்கே கோபத்திற்கு என்ன வேலை???

என்ன சரி தானே??

1 comment:

ச.ஜெ.ரவி said...

நம் வாழ்க்கையில் 10 சதவீதம் நமக்கு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்தது. மீதி 90 சதவீதம் நாம் அந்த நேரத்தில் எப்படி நடந்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது.
////////////////////

அருமையான வரிகள்; ஆழமான கருத்துகள்.

/////////////
உதாரணத்திற்கு, காலையில் அம்மாவோ, தங்கையோ, மனைவியோ தேநீர் கொண்டு வரும் பொழுது......
//////////////
அதென்ன உதாரணத்துக்கு அம்மாவோ, தங்கையோ, மனைவியோ தான் தேநீர் வழங்க வேண்டுமா? அப்பாவோ, தம்பியோ, கணவனோ தேநீர் வழங்க கூடாதா? என்ன கொடுமை மேடம்.