16 December 2006

தந்தை - மகன்

தன் மகன் மேலே போயிடுவான்னு
வழியனுப்பும் தந்தை!!
படியில் தொங்கும் மகன்!!

18 November 2006

வளர்ந்த நாடுகளில் இந்தியா!!

நான் போன வாரம் பெங்களுர் போயிருந்தேன் இரண்டு காரணங்களுக்காக. முதல் காரணம் என் நண்பர்களை சந்திக்க. இரண்டாவது காரணம் என் தங்கையின் M.Phill பிராஜக்ட் தேட.(முக்கியமானத இரண்டாவதா போட்டதுக்கு யாரு திட்டுறாங்களோ இல்லையோ என் தங்கை நிச்சயம் திட்டுவா!! )

பெங்களுர் போகும் போது நிச்சயம் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டேன் இப்படி ஒரு உலகத்தை பெங்களுரில் பார்ப்பேன் என்று. உண்மையிலேயே நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என் தங்கையின் இரண்டு நண்பர்களுக்கு. நன்றி திருலோக், விவேக்.

பெங்களுரில் நானும் குறைந்தது 6 மாத காலம் இருந்திருப்பேன் வேலை தேட. நான் நன்றாக ஊர் சுற்றுவேன். ஊர் சுற்ற நேரம் காலம், சோர்வு என்று எதைப் பற்றியும் கவலைப் பட்டதில்லை. கூப்பிட்ட உடனே கிளம்பி விடுவேன். அவ்வளவு ஆர்வம் ஊர் சுற்றுவதில் எனக்கு!! இந்த வேலை தேடும் நேரம் போக மிச்ச நேரங்களில் பெங்களுரைச் சுற்றியிருக்கிறேன். நிறைய இடங்கள். பிரிகேட் ரோட், லால் பார்க், இஸ்கான் ................. ஆனால் இப்படி ஒரு இடம் பெங்களுரில் நான் நினைத்துக் கூட பார்த்தில்லை. உண்மையிலேயே சூப்ப்ப்பபர்!!

மெஜஸ்டிக்கில் இருந்து 1 1/2 மணி நேர பயணத்தில் இருந்தது ஜக்குர். Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research(GKVK). இங்கே நிறைய ஆராய்ச்சி எல்லாம் பண்றாங்க. இந்த இடமே ரொம்ப ரொம்ப ரம்மியமா இருந்தது. நீர் வீழ்ச்சி, விதவிதமான மலர்ன்னு சுற்றுப்புறமே சூப்பரா இருந்தது. இப்படி இதமான சுழ்நிலையில் எவ்வளவு நேரம் வேலை பார்த்தாலும் நமக்கு சோர்வே வராது. அங்கே வேலை பார்ப்பவர்கள் அந்த இடத்தை விட்டு எதற்காகவும் வெளியே செல்லக் கூட தேவையே இல்லாத அளவு எல்லா வசதியும் உள்ளேயே செய்திருக்கிறார்கள். இந்தியாவில் திறமைசாலிகளுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போக அவர்களுடைய சுற்றுப்புறமும், சுழ்நிலைகளுமே சில நேரங்களில் காரணமாக அமைந்து விடுகிறது. இதற்கு நேர்மாறக இருந்தது JNC. நல்ல ஒரு முன்னேற்றம்.

அங்கே இருந்து நாங்கள் சென்ற இடம் NCBS. உண்மையில் நான் இந்தியாவின் ஒரு பகுதியில் தான் இருக்கிறேனா என்ற சந்தேகமே வரும் அளவுக்கு வியப்பு தாங்க முடியவில்லை!! போட்டோ பிடிக்காமல் போய்விட்டேனேன்னு இன்றும் வருந்துகிறேன்!! அங்கே எங்கே பார்த்தாலும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள். ஆனா, நாம சினிமாவில் பார்க்கிறது மாதிரி எல்லாம் யாருமே குறுந்தாடி வச்சிக்கிட்டோ, கறுப்பு கோட்டு சூட்டுன்னு எல்லாம் போடலை!! சினிமாவில் ரொம்ப தான் பில்டப் பண்றாங்கப்பா!! இங்கேயும் சகலமும் உள்ளேயே இருக்கு. இங்கு இருக்கிறவங்க தங்க இடம்ன்னு எல்லாமே உள்ளேயே இருக்கு. சமைக்க கூட தேவையேயில்லை!! அங்க மேஸ்ல சாப்பாடு சுப்பரா இருக்கு. அதுவும் குறைந்த விலையில். என்னடா இன்னும் சாப்பாட பத்தி எதுவும் எழுதலேயேன்னு என் நண்பர்கள் வருந்த கூடாது இல்ல, அதான் எழுதிட்டேன்!! ;-) அப்புறம் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகணும், என்னான்ன இங்க வேலை பார்க்கிறவங்க இந்த நேரம் தான் வரணும், இந்த நேரத்தில் தான் வேலை பார்க்கணும்னுங்கற கட்டாயம் எல்லாம் இல்ல. அவங்க இஷ்ட பட்ட நேரத்தில வரலாம், வேலை பார்க்கலாம்ன்னு நினைச்சா பார்க்கலாம், இல்ல விளையாடணும்னு நினைச்சா அதுக்கும் ஆயிரக்கணக்கில இடத்த விட்டு ஒவ்வொரு விளையாட்டுக்கும் தேவையான எல்லா வசதியும் செய்திருக்கிறார்கள். நானும் முன்பு யோசித்திருக்கிறேன், நமக்கு இப்படி எல்லாம் சுதந்திரம் கொடுத்தால் அதை சரியாக பயன்படுத்துவோமா?? நாம் தான் எதை செய்யாதேன்னு சொல்றாங்களோ அதை மட்டும் தானே செய்வோம். இந்த கல்வி முறையை நானும் எதிர்த்திருக்கிறேன். அதே சமயம் வெளி நாடுகளில் உள்ள கல்வி முறை நமக்கு ஒத்து வருமான்னு யோசித்தும் இருக்கிறேன். ஆனால் எதுவும் முடியும்ன்னு இவர்கள் நிருபித்து இருக்கிறார்கள்!! நம் கல்வி முறையிலேயே ஊறி வளர்ந்த இவர்களுக்கே இது சாத்தியம் ஆகிறது என்றால் அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் சாத்தியமே!! இன்னொரு முக்கியமான விஷயம், சொல்ல மறந்திட்டேன். அது என்னான்ன, NCBSல, இருந்து Ph.d பண்ண வெளிநாடு போனவங்க அந்த நாட்டு பெண்ணுங்களை கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்காங்களா! அதனால தானொ என்னவோ அவங்க குழந்தைகளை பார்க்கிறப்போ நாம இருக்கிறது இந்தியா தானான்னு ஒரு சந்தேகமே வந்திருச்சி!! பெங்களுரே அப்படித் தானே!! இங்கே என்னான்னு கேட்கிறீங்களா????

அடுத்து நாங்க போனது university of agriculture sciences. எனக்கு தோட்டக்கலையில் கொஞ்சம் ஆர்வம் ஜாஸ்தி!!! நானும் என் வீட்டில் நிறைய செடி, கொடிகளை வளர்க்கிறேன். என் நெருங்கிய நண்பர்களில் இவர்களும் (என் செடி, கொடிகளும்) உண்டு!! நான் என் சந்தேசம், வருத்தம் எல்லாவற்றையும் அதனுடன் பகிர்ந்திருக்கிறேன். நிறைய பேர் என்னை கிண்டல் கூட செய்திருக்கிறார்கள். நான் கவலை பட்டதில்லை!! அவர்களுக்கு புரியவைக்க முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் பல முறை என் முயற்சி வீணாகியிருக்கிறது!! இங்கு, நிறைய பேர் இந்த மரம், செடிகளோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். வேரோடு கொண்டு வைத்தாலே ஒரு செடி வளர எவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறது. வந்து விடு எனக்காக என்று என்னை தினமும் கெஞ்ச வைத்த செடியும் என்னிடம் உண்டு. அதே சமயம் எவ்வளவு கெஞ்சியும் வராமல் என்னை 3 வருடம் காக்க வைத்து இன்று தினமும் நான் ஆபிஸ் விட்டு வரும் போது என்னை தன் வாசமுள்ள மலர்களால் வரவேற்கும் பவளமல்லியும் உண்டு. ஆனால் இங்கு என்னடாவென்றால் ஒரே ஒரு இலையை வைத்து ஒரு செடியை உருவாக்கும் முயற்சி நடக்கிறது!! மரம், செடிகளுக்கும் உயிர், உணர்வு இருப்பதை இங்கே வந்தால் நாம் உணர்வு பூர்வமாக அனுபவிக்கலாம்!!

இதை எல்லாம் பார்க்கும் போது வளர்ந்த நாடுகளில் இந்தியா என்று சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை!! என்ன என் தலைப்பு சரி தானே??

25 October 2006

சந்திப்பு!!

Friendship Forever

ஒவ்வொரு வருஷமும் தீபாவளிக்கு அடுத்த நாள் என்னோட பட்ட மேற்படிப்பு படிச்ச நண்பர்கள் எல்லோரும் எங்கே இருந்தாலும் அன்று காலையில் 10.30 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளக்கரையில் சந்திப்பது என்று முடிவுசெய்து இருந்தோம். அதே போல் இந்த ஆண்டும் சந்திப்பு நடந்தது. இது இரண்டாம் வருடம்.

பங்கு கொண்ட நண்பர்களில் பலர் தொலை தூரங்களில் உள்ள பல் வேறு ஊர்களில் பணியாற்றுபவர்கள். இந்த சந்திப்புக்காகவே ஊரில் இருந்து வந்திருந்தாங்க. போன வருஷம் பெண்ணுங்க மட்டுமே வந்திருந்தோம். ஆனால் இந்த முறை பசங்க கூட வந்திருந்தாங்க. என் கூட படித்தவர்கள் தானான்னு நினைக்கிற அளவு ஒவ்வொருத்தரும் நல்ல நிலைமையில் இருக்காங்க. அவங்க பண்ண பந்தா இருக்கே!! ரொம்ப ரொம்ப சந்தேஷமா இருந்தது. இதுல ஒருத்தி அவள் புருஷனோடு வந்திருந்தா. 5 மாதக் குழந்தையை வயிற்றில் சுமந்த படி. எனக்கு அவள் வயிற்றை தொட்டுப் பார்க்க ஆசையாக இருந்தது. பக்கத்தில் அவள் கணவர். 7 மாதமானால் தான் அசைவுகளை உணர முடியும்மாம். அதற்காகத் தான் நானும் காத்திருக்கிறேன்னு சொன்னா. அட எல்லாரும் என்னை மாதிரியே ஆசைப் படுறாங்கப்பா. சரி இவ குழந்தைத் தான் வயித்திலே இருக்கு தொட முடியல, இன்னொருத்திக்கு குழந்தை பிறந்து 3 மாசம் ஆச்சின்னு சொன்னாங்க. சரி அவ வரட்டும், அவ குழந்தையை தூக்கலாம்னு ரொம்ப ஆசையா இருந்தேன். ஆனா அவ வரவேயில்லை. போன்ல அவ பையன் அழறதும் அவ சமாதனப் படுத்துறதும், என்னைய ஒரு 'அட' போட வச்சிருச்சு!!

போன வருஷம், எங்களில் நிறைய பேர் வேலை தேடும் வேலையில் இருந்தோம். ஆனால் இன்று எல்லோரும் வேலையில். ஆமாம் வெற்றியின் முதல் படியில் ஏறி விட்டோம்.

ஒவ்வொரு வருஷமும் இந்த சந்திப்பு தொடர்ந்தா ரொம்ப ரொம்ப சந்தேஷமா இருக்கும்.

தொடருமா!! பார்க்கலாம்!!.........................

24 October 2006

கறுப்பு நாய்!

தீபாவளிக்கு முதல் நாள், ஆபிஸ் வேற இருந்தது. யாருக்குமே வேலையே ஓடலை. எல்லோரும் தீபாவளி மூடிலேயே இருந்தோமா,எப்படா வீட்டிக்கு போயிடலாம்னு தான் எல்லாருடைய நினைப்பும். ஆபிஸ்ல தீபாவளி கொண்டாட்டம் வேற. ஒரு வழியா எல்லாம் முடிச்சி வீட்டுக்கு கிளம்பிட்டேன். வெளியே மழை வேற தூறிக்கிட்டே இருக்கு. வீட்டுல இருந்து ஆபிஸ் பக்கம் தான்னாலும் இரண்டு பஸ் மாறி தான் போற மாதிரி இருக்கும். அன்னிக்கும் அப்படித் தான். கீழவாசல்னு போட்டுக் கிட்டு வந்த ஒரு மினி பஸ்ஸில் ஏறி தெப்பக்குளம் வந்துட்டேன். இப்ப மழை கொஞ்சம் விட்ட மாதிரி இருக்கு. இரண்டு ஸ்டாப் தானே நடக்கலாமான்னு யோசிச்சேன். மழை பெஞ்சு முடிஞ்சு, மேகம் அழகா ஆரஞ்சு கலர் ஆடையிலே ஒரு தேவதைப் போல, அதை தெட்டுப் பார்க்கும் ஆசையோடு பறக்கும் பறவைக் கூட்டம், தகதகவென ஜெலிக்கும் குளம், அதைச் சுற்றி மின் விளக்குகள். இது எல்லாம் போதாதென்று கலர் கலர் பட்டாசுகள் வேற. இந்த அழகான சூழலில் நடக்க ஆசையாகத் தான் இருந்தது. நடந்தேயிருக்கலாம். அன்று நான் நடந்து போயிருந்தால், இன்று எனக்கு இந்த உறுத்தல் இருந்திருக்காது. என் உறுத்தலுக்குக் காரணம், அந்த கறுப்பு நாய்!

நான் நின்னுக்கிட்டு இருந்த நிறுத்ததிற்கு எதிரில் இருந்து ஒரு கறுப்பு நாய் என்னை நோக்கி ஓடி வந்திச்சி. நான் வேற அன்னக்கித் தான் என் வாழ்க்கையிலே ஐந்தாவது முறையா புடவை கட்டியிருந்தேன்!! ஒரு வேளை புடவையில் என் அழகைப் பார்த்து மயங்கிப் போய் தான் அந்த நாய் என்னை நோக்கி வருதோன்னு எனக்கு ஒரு சந்தேகம் வேற. இப்ப அது முன்ன விட வேகமா என்னை நோக்கி வருது. இப்ப எனக்கு சந்தேகம் போய் பயம் தான். அவ்வளவு வேகமா வந்த அந்த கறுப்பு நாய் திடீர்ன்னு எனக்கு ஒரு ஐந்தடி இடைவெளியில் ரோட்டுக்கு அப்படியும் இல்லாம, இப்படியும் இல்லாம, நடுவுலயும் இல்லாம ஒரு இடத்தில் ஒரு நிமிஷம் நின்னுட்டு, திரும்பவும் ஓடிப் போய் அனுப்பானடிக்கு போக பஸ் திரும்புற இடத்தில, சரியா அந்த
இடத்துக்குப் போன உடனே அங்கேயே அப்படியே படுத்திருச்சி!! எனக்கு பயங்கர அதிர்ச்சி!! ஒண்ணுமே புரியல!!

தீபாவளி நேரம்ல்ல நல்ல கூட்டம். நிறைய பஸ், கார், பைக், சைக்கிள்ன்னு நல்ல கூட்டம். எல்லா வண்டியும் வேக வேகமா வருது, போகுது. எல்லாரும் தீபாவளி மூடுல் இருந்தாங்க போல! இந்த களபரத்தில் அந்த நாய், எதைப்பத்தியும் கவலையேப் படாம நடு ரோட்டில் படுத்துக் கிடக்கு. என்ன ஆச்சி இந்த நாய்க்குன்னு யோசிச்சிக்கிட்டே அந்த நாய பார்க்கும் போது தான் அதுக்கு ஏதோ பிரச்சனைன்னு எனக்குத் தேணிச்சி. உத்துப் பாக்கிறேன், அந்த நாய் கால்ல இருந்து இரத்தம் வந்துக் கிட்டு இருக்கு. அப்ப தான் எனக்கு புரிஞ்சுச்சு யாரோ அது கால்ல வண்டிய ஏத்திட்டு போயிருக்காங்கன்னு!! அதனால எந்திரிக்கக் கூட முடியல. ஒவ்வொரு வண்டி வரும் போதும் எனக்கு மனசு திக்குதிக்குன்னு அடிச்சிக்கிச்சி!! எத்தனையோ பேர் அதத் தாண்டி போறாங்க, வர்ராங்க. ஆனா ஒருத்தருக்குக் கூட அதை தூக்கி ஒரு ஓரமா படுக்க வைக்கணும்னு தோணவேயில்லை!! மற்றவர்களுக்கு தோணவில்லைன்னு சொல்றேயே ஏன் நீ செய்திருக்கலாமேன்னு உங்களுக்கு கேட்கத் தூண்டும். எனக்கு உண்மையிலேயே தோணிச்சி, ஆனா, பயம் என்னைத் தடுத்து விட்டது. என்னால் அந்த காட்சியை பார்க்க சகிக்கவில்லை. பஸ்ஸும் வர்ர மாதிரி தெரியல. என்னால் அதற்கு மேல் அங்கே நிற்க கூட முடியவில்லை. நடக்க ஆரம்பித்து விட்டேன். இப்பொழுதும், மேகம் அழகா ஆரஞ்சு கலர் ஆடையிலே ஒரு தேவதைப் போல, அதை தெட்டுப் பார்க்கும் ஆசையோடு பறக்கும் பறவைக் கூட்டம், தகதகவென ஜெலிக்கும் குளம், அதைச் சுற்றி மின் விளக்குகள், கலர் கலர் பட்டாசுகள் எல்லாமே இருக்கு. ஆனால், இதை எல்லாம் ரசிக்கும் மனம் தான் இப்பொழுது எனக்கு இல்லை. என் மனசு பூராவும் அந்த கறுப்பு நாய் தான்.

அந்த நொடி நான் பயப்படாமல் இருந்திருந்தால் அந்த கறுப்பு நாயை காப்பாற்றியிருக்கலாம். அதற்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. இதை என் இணையத்தில் பதிவு செய்வதைத் தவிர எனக்கு வேற எதுவும் தோணவில்லை!! என்னை மன்னித்து விடு!!

15 October 2006

ஸ்வரங்கள்!!

பாட்டு எனக்கு மிகவும் பிடித்த விஷயம்!!இசையை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்பொழுதும் உண்டு.நான் அறிந்த சிலவற்றை என் இணையத்தில் பதிவு செய்யப் போகிறேன். பிழையிருந்தால் தெரிவியுங்கள்.
இன்றைய தலைமுறையினர் நிறைய பேர் நன்றாக பாடுறாங்க!!பாட்டுன்னா அதுல நிறைய வகை இருக்குல்ல - கர்நாடக சங்கீதம், இன்னிசை, நாட்டுப் புறப்பாட்டுனு நிறைய வகை.

இன்னிக்கி நாம எல்லோரும் எதாவது பாட்டை முணுமுணுத்திக்கிட்டே இருக்கிற மாதிரியான நிறைய வாய்ப்புக்கள் இருக்கு.அவ்வளவு ஏன் என் ஆபிஸில எப்பவும் பாட்டு ஒடிக்கிட்டே இருக்கும். பாட்டு இல்லாம ஆபிஸில சில பேருக்கு புரோகிராம்எழுத கூட முடியாது. காலையில ஆபிஸ் வந்த உடனே அவங்க தேடுறது ஹெட் போனைத் தான். அந்த அளவுக்கு இசை அவங்க புரோகிராம் கோடிங்கிளேயும் கலந்து விட்டது.

இசை - இது எதை வேண்டும்னாலும் செய்யும். என் போன்ற அமைதியானவர்களையும்(!!) பேச வைக்கும் சக்தி இந்த இசைக்கு உண்டு.

நாம சாதாரணமா ஒரு பாட்டை பாடும் போது சில நேரம் நமக்கே தெரிஞ்சுடும் இந்த பாட்டு நமக்கு வருமா - வராதான்னு! சில நேரம், நம்ம பாட்டு கேட்டு நமக்கே தோணும், நாம எஸ்.பி.பி. இல்ல ஜானகி அம்மா மாதிரி பாடுறோமோன்னு.ஆனா, அதே பாட்ட நல்ல பாடத் தெரிஞ்சவங்க முன்னாடி பாடும் போது சில நேரம் அவங்க அலட்சியமா இந்த பாட்டு உங்களுக்குவருமான்னு நாம பாட ஆரம்பிச்ச அடுத்த நொடியே கேட்பாங்க. நமக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கும். எப்படித் தான் கண்டு பிடிக்கிறாங்களோன்னு!! இது கண்டு பிடிக்கிறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல. இதுக்கு தேவை ஸ்வரம் பத்தின கொஞ்சம் அறிவு.இந்த 7 ஸ்வரங்களை பிரித்து பார்க்க தெரிந்தால் போதும் ஸ்ருதியை எளிதில் பிடித்து விடலாம். இதுக்கு இசையை முறைப்படி கத்துக்கணும்னு இல்ல. உதாரணத்துக்கு, எஸ்.பி.பி.. அவர் இசையை முறைப்படி கத்துக்கல. இருந்தாலும் அவரால் பாட முடிகிறதே!

அதனால, இத தெரிஞ்சிக்க நாம வீட்டுல கத்தியெ, அறிவாளெ எப்படி கூர்மையாக்குறாங்களொ அது மாதிரி நம்ம காதை கொஞ்சம் கூர்மையாக்கிக்கணும் அவ்வளவு தான். நாம இந்த ஸ்வரத்தை தெரிஞ்சிக்கிட்டா போதும் எதை வேண்டுமானாலும் பாடி விடலாம்.அதே மாதிரி, பாட குரல் ஒன்றும் முக்கியமில்லை. உதாரணத்துக்கு, நித்திய ஸ்ரீ , பவதாரணி . உண்மையிலேயே சங்கீதத்தைப்பொறுத்த வரை இந்த குரல்கள் எல்லாம் தவறான குரல் தான். இருந்தாலும் அவர்கள் ஜொலிக்கக் காரணம் அவர்கள் ஸ்வரத்தை அறிந்ததால் தான். என் போன்ற குரல் இல்லாதவர்களாலும் நன்றாக பாட முடியும், ஸ்வரம் தெரிந்தால்!!

இதில் குரலோடு, ஸ்வரம் சேர்ந்தால் - அது தெய்வீகம்!!

முழுமை!!

ஓர் பெண் எப்பொழுது முழுமை அடைகிறாள்!! இதில் பலருக்கு பலவிதமான கருத்து.பொதுவான ஒரு கருத்து ஒரு பெண் தாய்மை அடையும் பொழுது தான் முழுமை அடைகிறாள் என்பது!

இது பழசு கண்ணா பழசு !

இப்பொழுது, ஒர் பெண், தான் பெற்ற பிள்ளையை சிறந்த முறையில் வளர்த்து அவன் ஒரு சிறந்த குடிமகனாக விளங்கினால் மட்டுமேஅவள் முழுமை அடைகிறாளாம்!!

இது என்ன புதுசு கண்ணா புதுசா!!

இது என் நண்பர் ஒருவரின் கருத்து! தாய்மை அடைந்தவள் எல்லாம் முழுமை அடைந்ததாக சொல்லி விட முடியாது. அப்படி சொன்னால், ஒரு குழந்தையைபெற்று அதை அனாதையாக விடுகிறாளே, அந்த பெண்ணும் முழுமை அடைந்து விடுவதாக ஆகி விடுகிறதே - இது சரியா!!

இது தான் அந்த நண்பரின் கருத்து.

என் நண்பரின் இந்த கருத்தை பார்க்கும் பொழுது எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், அவர் பார்வையில் ஒரு குழந்தை அனாதை ஆவதற்கு அந்த தாய் மட்டுமே காரணம் என்பது போல் உள்ளது.அது உண்மை தானா!! இந்த இடத்தில் அந்த குழந்தைக்கு காரணமான அந்த ஆண் எங்கே போனான். அவனுக்கு இதில் எந்த பங்கும் இல்லையா!! எல்லாவற்றிற்க்கும் அந்த பெண்ணை மட்டும் குற்றம் சொல்வது நியாயமா!!

ஒவ்வொருதருடைய சிந்தனைகளும் மாறுபடும் தான். அதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் பொது இடத்திலோ அல்லது இது போன்ற இணையத்திலோ பதிவு செய்யும் போது தராசின் முள்ளாக நின்று யோசிக்கலாமே!! என்ன சரி தானா??

Code Library - Shell_exec()

Hi Friends,

I would like to share the knowledge some thing I gathered in PHP

Shell_exec():

Use : we can execute shell scripts from a php file

Similar Concept : Like Function Calling Statement in C & C++

Example:

shell_exec("php -q MonthlyTime.php ". $StartDate." ".$EndDate." ".$location_id);

shell_exec("php -q MonthlyTime.php ". 2006-09-27 ." ".2006-09-31." ". 15 );

Here
php –q -> command to run a php file
MonthlyTime.php -> php file that I would like to run

date('Y-m-d',strtotime($StartDate))
date('Y-m-d',strtotime($EndDate))
$location_id

These are parameters that I have passed to the file “MonthlyTime.php”

Note: please maintain a blank space between parameters

How do I receive the parameters ( values ) in the file “MonthlyTime.php”:

$StartDate = $argv[1];
$enddate = $argv[2];
$LocationID = $argv[3];

Here we can receive those values from an array $argv you can pass ‘n’ number of arguments and also receive.

Practical Application:

Defaulter.php

If ( $ResultFlag==1 )
{
shell_exec("php -q MonthlyTime.php ".$StartDate." ".$EndDate." ".$location_id);

}

Else
{
shell_exec("php -q MonthlyHour.php ".$StartDate." ".$EndDate." ".$location_id);

}
?>

Here we are checking a condition for $ResultFlag and we are executing a php file at the run time by using shell_exec(); When our file reads the command shell_exec() then the program control will switch over to that file like “MonthlyTime.php” then the control will return to the next line in the parent file like Defaulter.php”

I hope now you will get an idea about shell_exec( ); in php


Here we are checking a condition for $ResultFlag and we are executing a php file at the run time by using shell_exec();

When our file reads the command shell_exec() then the program control will switch over to that file like “MonthlyTime.php” then the control will return to the next line in the parent file like “Defaulter.php”

I hope now you will get an idea about shell_exec( ); in php



01 October 2006

இடியட்!!


தலைப்பைப் பார்த்து யாரும் டென்ஷன் ஆக வேண்டாம். இது நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எழுதிய கதையின் தலைப்பு. இந்த கதை 'பூந்தளிர்'னு ஒரு சிறுவர் பத்திரிக்கையிலே வெளி வந்தது. இந்த கதைக்கு அப்ப எனக்கு 100 ரூபாய் அந்த பத்திரிக்கையில் இருந்து அனுப்பியிருந்தாங்க. அது தான் என் முதல் சம்பளம்!! இப்ப இந்த பத்திரிக்கை இருக்கிற மாதிரி தெரியல!! உன் கதைய போட்டாங்களே அப்பறம் எப்படி அந்த பத்திரிக்கை இருக்கும்னு யாரோ கேட்கிறது என் காதிலும் விழுது. ஹிஹி. பொது வாழ்க்கையில் இது எல்லாம் சகஜமப்பா!!

சரி சரி இப்படியே வெட்டிக் கத பேசிக்கிட்டு இருந்தா, எப்ப தான் என் முதல் கதய சொல்றதாம்!! வாங்க கதைக்கு போகலாம்.

அது ஒரு மழைக் காலம். கதையின் ஹீரோ ஒரு பள்ளிச் சிறுவன். அன்று அவன் பள்ளி விட்டு வீட்டுக்கு போயிட்டு இருந்தான்.நம்ம ஹீரோ சின்னப் பையன்னாலும் ரொம்ப ரொம்ப தைரியசாலி!! ஆனா என்ன, அவனுக்கு இடியக் கேட்டா தான் கொஞ்சம் பயம்.மழை காலத்திலே அதுவும் விளக்கு வைக்கிற நேரமா பாத்து கரண்டு கட் பண்ணுவாங்க பாருங்க, அப்ப இருட்டாயிடும் இல்ல, அந்த இருட்டக் கண்டா கொஞ்சம் பயம் அவனுக்கு. அது போக அவன் ரொம்ப ரொம்ப தைரியசாலி!!

அன்றும் அப்படித் தான். மழைக் காலம் என்பதால் சீக்கிரமே இருட்ட ஆரம்பிச்சிருச்சி. பயங்கர இடி, மின்னல் வேற. நம்ம ஹீரோவுக்கு ரொம்ப பயம் வந்திடுச்சி. அவன் போயிட்டு இருந்த தெருவில அவனைத் தவிர வேற யாரும் நடக்கல, பாவம் அவனுக்கு அந்த பயம் வேற. என்னடா பண்ணலாம்னு யோசிச்சப்ப, அவனுக்கு இந்த இடிய நாம எண்ணிக்கிட்டே வந்தா பயம் போயிடும்னு தோணிச்சு. அதனால அவன் ஒவ்வொரு இடியா எண்ண ஆரம்பிச்சான்.

அப்ப இடி ஒன்னு இடித்தது.
இடி ஒன்னு என்றான்!
அடுத்த இடி இடித்தது.
இடி இரண்டு என்றான்!
அடுத்து அடுத்து இடிகள் இடித்தன. ஏழாவது இடி.
இடி ஏழு என்றான்!
தொடர்ந்து இன்னொரு இடி, மின்னலுடன் இடிக்க - 'இடியட்டு' என்று சொன்ன நொடியில் - பின்னால் இருந்து - 'பளார்'!! என்று விழுந்தது ஓர் அறை அவன் கன்னத்தில்! 'ஆ' என்று அலறியப் படி திரும்பியவனிடம் பின்னால் வந்து கொண்டு இருந்த அவன் கேட்டான், 'யாராடா இடியட், நானா?' கன்னத்தைத் தடவியபடி திருதிருவென்று விழித்தான் நம் ஹீரோ!

எப்படி நம்ம கதை, சூப்பரா இல்ல!!

அன்னைக்கும் இப்படித்தான், என் அப்பா சொல்லச் சொல்ல எழுதினேன். இன்னைக்கும் அப்படித்தான், என் அப்பா சொல்லச் சொல்ல டைப் பண்ணேன்!!

ஹிஹி!!





முதல் எழுத்து

இது என் முதல் இணையதளத்தின் முதல் பதிவு!!

இனி,

என் கிறுக்கல்கள், கருத்துக்கள் .........

நான் பார்த்தது, படித்தது, ரசித்தது, பிடித்தது .........

என எல்லாவற்றையும் எழுதப் போகிறேன்.

நிவேதிதா..................