01 October 2006

இடியட்!!


தலைப்பைப் பார்த்து யாரும் டென்ஷன் ஆக வேண்டாம். இது நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எழுதிய கதையின் தலைப்பு. இந்த கதை 'பூந்தளிர்'னு ஒரு சிறுவர் பத்திரிக்கையிலே வெளி வந்தது. இந்த கதைக்கு அப்ப எனக்கு 100 ரூபாய் அந்த பத்திரிக்கையில் இருந்து அனுப்பியிருந்தாங்க. அது தான் என் முதல் சம்பளம்!! இப்ப இந்த பத்திரிக்கை இருக்கிற மாதிரி தெரியல!! உன் கதைய போட்டாங்களே அப்பறம் எப்படி அந்த பத்திரிக்கை இருக்கும்னு யாரோ கேட்கிறது என் காதிலும் விழுது. ஹிஹி. பொது வாழ்க்கையில் இது எல்லாம் சகஜமப்பா!!

சரி சரி இப்படியே வெட்டிக் கத பேசிக்கிட்டு இருந்தா, எப்ப தான் என் முதல் கதய சொல்றதாம்!! வாங்க கதைக்கு போகலாம்.

அது ஒரு மழைக் காலம். கதையின் ஹீரோ ஒரு பள்ளிச் சிறுவன். அன்று அவன் பள்ளி விட்டு வீட்டுக்கு போயிட்டு இருந்தான்.நம்ம ஹீரோ சின்னப் பையன்னாலும் ரொம்ப ரொம்ப தைரியசாலி!! ஆனா என்ன, அவனுக்கு இடியக் கேட்டா தான் கொஞ்சம் பயம்.மழை காலத்திலே அதுவும் விளக்கு வைக்கிற நேரமா பாத்து கரண்டு கட் பண்ணுவாங்க பாருங்க, அப்ப இருட்டாயிடும் இல்ல, அந்த இருட்டக் கண்டா கொஞ்சம் பயம் அவனுக்கு. அது போக அவன் ரொம்ப ரொம்ப தைரியசாலி!!

அன்றும் அப்படித் தான். மழைக் காலம் என்பதால் சீக்கிரமே இருட்ட ஆரம்பிச்சிருச்சி. பயங்கர இடி, மின்னல் வேற. நம்ம ஹீரோவுக்கு ரொம்ப பயம் வந்திடுச்சி. அவன் போயிட்டு இருந்த தெருவில அவனைத் தவிர வேற யாரும் நடக்கல, பாவம் அவனுக்கு அந்த பயம் வேற. என்னடா பண்ணலாம்னு யோசிச்சப்ப, அவனுக்கு இந்த இடிய நாம எண்ணிக்கிட்டே வந்தா பயம் போயிடும்னு தோணிச்சு. அதனால அவன் ஒவ்வொரு இடியா எண்ண ஆரம்பிச்சான்.

அப்ப இடி ஒன்னு இடித்தது.
இடி ஒன்னு என்றான்!
அடுத்த இடி இடித்தது.
இடி இரண்டு என்றான்!
அடுத்து அடுத்து இடிகள் இடித்தன. ஏழாவது இடி.
இடி ஏழு என்றான்!
தொடர்ந்து இன்னொரு இடி, மின்னலுடன் இடிக்க - 'இடியட்டு' என்று சொன்ன நொடியில் - பின்னால் இருந்து - 'பளார்'!! என்று விழுந்தது ஓர் அறை அவன் கன்னத்தில்! 'ஆ' என்று அலறியப் படி திரும்பியவனிடம் பின்னால் வந்து கொண்டு இருந்த அவன் கேட்டான், 'யாராடா இடியட், நானா?' கன்னத்தைத் தடவியபடி திருதிருவென்று விழித்தான் நம் ஹீரோ!

எப்படி நம்ம கதை, சூப்பரா இல்ல!!

அன்னைக்கும் இப்படித்தான், என் அப்பா சொல்லச் சொல்ல எழுதினேன். இன்னைக்கும் அப்படித்தான், என் அப்பா சொல்லச் சொல்ல டைப் பண்ணேன்!!

ஹிஹி!!





No comments: