தீபாவளிக்கு முதல் நாள், ஆபிஸ் வேற இருந்தது. யாருக்குமே வேலையே ஓடலை. எல்லோரும் தீபாவளி மூடிலேயே இருந்தோமா,எப்படா வீட்டிக்கு போயிடலாம்னு தான் எல்லாருடைய நினைப்பும். ஆபிஸ்ல தீபாவளி கொண்டாட்டம் வேற. ஒரு வழியா எல்லாம் முடிச்சி வீட்டுக்கு கிளம்பிட்டேன். வெளியே மழை வேற தூறிக்கிட்டே இருக்கு. வீட்டுல இருந்து ஆபிஸ் பக்கம் தான்னாலும் இரண்டு பஸ் மாறி தான் போற மாதிரி இருக்கும். அன்னிக்கும் அப்படித் தான். கீழவாசல்னு போட்டுக் கிட்டு வந்த ஒரு மினி பஸ்ஸில் ஏறி தெப்பக்குளம் வந்துட்டேன். இப்ப மழை கொஞ்சம் விட்ட மாதிரி இருக்கு. இரண்டு ஸ்டாப் தானே நடக்கலாமான்னு யோசிச்சேன். மழை பெஞ்சு முடிஞ்சு, மேகம் அழகா ஆரஞ்சு கலர் ஆடையிலே ஒரு தேவதைப் போல, அதை தெட்டுப் பார்க்கும் ஆசையோடு பறக்கும் பறவைக் கூட்டம், தகதகவென ஜெலிக்கும் குளம், அதைச் சுற்றி மின் விளக்குகள். இது எல்லாம் போதாதென்று கலர் கலர் பட்டாசுகள் வேற. இந்த அழகான சூழலில் நடக்க ஆசையாகத் தான் இருந்தது. நடந்தேயிருக்கலாம். அன்று நான் நடந்து போயிருந்தால், இன்று எனக்கு இந்த உறுத்தல் இருந்திருக்காது. என் உறுத்தலுக்குக் காரணம், அந்த கறுப்பு நாய்!
நான் நின்னுக்கிட்டு இருந்த நிறுத்ததிற்கு எதிரில் இருந்து ஒரு கறுப்பு நாய் என்னை நோக்கி ஓடி வந்திச்சி. நான் வேற அன்னக்கித் தான் என் வாழ்க்கையிலே ஐந்தாவது முறையா புடவை கட்டியிருந்தேன்!! ஒரு வேளை புடவையில் என் அழகைப் பார்த்து மயங்கிப் போய் தான் அந்த நாய் என்னை நோக்கி வருதோன்னு எனக்கு ஒரு சந்தேகம் வேற. இப்ப அது முன்ன விட வேகமா என்னை நோக்கி வருது. இப்ப எனக்கு சந்தேகம் போய் பயம் தான். அவ்வளவு வேகமா வந்த அந்த கறுப்பு நாய் திடீர்ன்னு எனக்கு ஒரு ஐந்தடி இடைவெளியில் ரோட்டுக்கு அப்படியும் இல்லாம, இப்படியும் இல்லாம, நடுவுலயும் இல்லாம ஒரு இடத்தில் ஒரு நிமிஷம் நின்னுட்டு, திரும்பவும் ஓடிப் போய் அனுப்பானடிக்கு போக பஸ் திரும்புற இடத்தில, சரியா அந்த
இடத்துக்குப் போன உடனே அங்கேயே அப்படியே படுத்திருச்சி!! எனக்கு பயங்கர அதிர்ச்சி!! ஒண்ணுமே புரியல!!
தீபாவளி நேரம்ல்ல நல்ல கூட்டம். நிறைய பஸ், கார், பைக், சைக்கிள்ன்னு நல்ல கூட்டம். எல்லா வண்டியும் வேக வேகமா வருது, போகுது. எல்லாரும் தீபாவளி மூடுல் இருந்தாங்க போல! இந்த களபரத்தில் அந்த நாய், எதைப்பத்தியும் கவலையேப் படாம நடு ரோட்டில் படுத்துக் கிடக்கு. என்ன ஆச்சி இந்த நாய்க்குன்னு யோசிச்சிக்கிட்டே அந்த நாய பார்க்கும் போது தான் அதுக்கு ஏதோ பிரச்சனைன்னு எனக்குத் தேணிச்சி. உத்துப் பாக்கிறேன், அந்த நாய் கால்ல இருந்து இரத்தம் வந்துக் கிட்டு இருக்கு. அப்ப தான் எனக்கு புரிஞ்சுச்சு யாரோ அது கால்ல வண்டிய ஏத்திட்டு போயிருக்காங்கன்னு!! அதனால எந்திரிக்கக் கூட முடியல. ஒவ்வொரு வண்டி வரும் போதும் எனக்கு மனசு திக்குதிக்குன்னு அடிச்சிக்கிச்சி!! எத்தனையோ பேர் அதத் தாண்டி போறாங்க, வர்ராங்க. ஆனா ஒருத்தருக்குக் கூட அதை தூக்கி ஒரு ஓரமா படுக்க வைக்கணும்னு தோணவேயில்லை!! மற்றவர்களுக்கு தோணவில்லைன்னு சொல்றேயே ஏன் நீ செய்திருக்கலாமேன்னு உங்களுக்கு கேட்கத் தூண்டும். எனக்கு உண்மையிலேயே தோணிச்சி, ஆனா, பயம் என்னைத் தடுத்து விட்டது. என்னால் அந்த காட்சியை பார்க்க சகிக்கவில்லை. பஸ்ஸும் வர்ர மாதிரி தெரியல. என்னால் அதற்கு மேல் அங்கே நிற்க கூட முடியவில்லை. நடக்க ஆரம்பித்து விட்டேன். இப்பொழுதும், மேகம் அழகா ஆரஞ்சு கலர் ஆடையிலே ஒரு தேவதைப் போல, அதை தெட்டுப் பார்க்கும் ஆசையோடு பறக்கும் பறவைக் கூட்டம், தகதகவென ஜெலிக்கும் குளம், அதைச் சுற்றி மின் விளக்குகள், கலர் கலர் பட்டாசுகள் எல்லாமே இருக்கு. ஆனால், இதை எல்லாம் ரசிக்கும் மனம் தான் இப்பொழுது எனக்கு இல்லை. என் மனசு பூராவும் அந்த கறுப்பு நாய் தான்.
அந்த நொடி நான் பயப்படாமல் இருந்திருந்தால் அந்த கறுப்பு நாயை காப்பாற்றியிருக்கலாம். அதற்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. இதை என் இணையத்தில் பதிவு செய்வதைத் தவிர எனக்கு வேற எதுவும் தோணவில்லை!! என்னை மன்னித்து விடு!!
24 October 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment